பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

ராணி மங்கம்மாள்

பிரக்ஞை தவறிக்கொண்டிருந்த நிலையில் அரண்மனைக் காவலன் ஒருவன் வந்து அறையின் வெளிப்பக்கமாக நின்ற படியே அவளைக் கவனித்தான். அவளிருந்த நிலை கண்டு அவன் மனம் இளகிப் பாகாய் உருகியது.

"தான தர்மங்களைத் தாராளமாகச் செய்து சத்திரம் - சாவடிகளைத் திறந்து சாலைகள் அமைத்து, குளங்கள் வெட்டி அறம் செய்த மகாராணி மங்கம்மாள் தலையில் கடைசிக் காலத்தில் இப்படியா எழுதியிருக்க வேண்டும்? பாவம்" என்று அந்தக் காவலன் அனுதாப உணர்வோடு தனக்குத் தானே முணுமுணுத்தது அவள் செவிகளில் விழுந்ததா இல்லையா எனத் தெரியவில்லை.

ராணிமங்கம்மாளைச் சொந்தப் பேரன் அரண்மனையிலேயே சிறை வைத்துவிட்டான் என்ற செய்தி மெல்ல மெல்ல வெளி உலகில் மக்களிடையே பரவி விட்டது. அப்படிப் பரவுவதைத் தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை.

'இத்தனை தானதர்மங்களைச் செய்த புண்ணியவதிக்கா இந்தக் கதி நேர்ந்தது?' என்று தனியாகவும் இரகசியமாகவும் தங்களுக்குள் அநுதாபமாகப் பேசிக் கொண்டமக்கள் கூடத் தங்கள் உள்ளுணர்வை வெளிப்படையாகக் காண்பித்துக்கொள்ள அஞ்சித் தயங்கினார்கள். பாட்டியின் மேல் தீராப் பகையும் குரோதமும் கொண்டுவிட்ட பேரன் தங்களை என்னென்ன தண்டனைக்கு உள்ளாக்குவானோ என்று யாவரும் பயந்தார்கள். அநுதாபத்தைப் பயமும் தயக்கமும் வென்று விட்டன்.

ராஜ விசுவாசத்துக்குப் பங்கமில்லாதது போன்ற ஒரு வகை அடக்கமும் அமைதியும் நாடு முழுவதும் தென்பட்டாலும் உள்ளூற இந்த அக்கிரமத்தைக் கேட்டு மக்கள் மனம் குமுறிக் கொண்டிருந்தார்கள். வெளிப்படையாகத் தெரியாத ஒருவகை உள்ளடங்கிய வெறுப்பு நாடு முழுவதும் பரவியிருந்தது. நீறுபூத்த நெருப்பாயிருந்த