பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

225

இந்த வெறுப்புணர்வை விஜயரங்கனோ, அவனுக்குத் துணையாயிருந்த அவனை ஆட்சியில் அமர்த்திய கலகக்காரர்களோ புரிந்து கொள்ளவில்லை. எதையும் தங்களால் அடக்கிவிட முடியும் என்ற திமிரோடு இருந்தார்கள். ஆட்சி கையிலிருந்ததுதான் அதற்குக் காரணம.

ஆனால் அரண்மனை முழுவதும் இது அடாத செயல் என்ற எண்ணமே பரவியிருந்தது. விஜயரங்கனை எதிர்த்தும் முரண்பட்டும் கலகம் செய்ய அவர்களால் முடியவில்லையேயன்றி, 'ராணியை இப்படிச் செய்தது அக்கிரமம்' என்று அரண்மனை ஊழியர்கள் அனைவரும் உணர்ந்திருந்தார்கள்.

பிரக்ஞை தவறுகிற நிலையில் ராணி மங்கம்மாளைச் சிறையில் பார்த்த காவலன் பதறி நிலைகுலைந்து ஓடிப் போய் அதை விஜயரங்கனிடம் தெரிவித்தான். பாட்டியார் ஏறக்குறைய மரணப் படுக்கையில் இருப்பதாகப் புரிந்து கொண்ட விஜயரங்கன் உடனே தன் சகாக்களைக் கலந்தாலோசித்தான்.

"இறக்கும் தறுவாயிலிருக்கிற ராணி மங்கம்மாளை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. பாட்டி சாகும்போது கூடஉங்களுடைய முகத்தில் விழிக்க விரும்பாமல் செத்தாள் என்ற கெட்ட பெயர் உங்களுக்கு வரக்கூடாது" என்றார்கள் அவனுடைய சகாக்களில் சிலர். விஜயனும் பாட்டியின் அந்திமக் காலத்தில் ஒரு நாடகமாடித் தீர்த்து விடுவதென்று தீர்மானித்துக் கொண்டான். சிறையிலிருந்து தேடிவந்து செய்தி சொன்ன காவலனையே திரும்பவும் சிறைக்கு அனுப்பி, "முகத்தில் நீர் தெளித்துப் பருகத் தண்ணீர் கொடுத்து பாட்டிக்குத் தெளிவு வரச் செய்!" என்று அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்தான் விஜயரங்க சொக்கநாதன்.

அந்தக் காவலனும் உடனே ஓடோடிச் சென்று சிறை வைக்கப்பட்டிருந்த ராணி மங்கம்மாளின் அறைக் கதவைத் திறந்து