பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

ராணி மங்கம்மாள்

அவள் முகத்தில் நீர் தெளித்தான். மெல்ல மெல்லப்பிரக்ஞை வந்தது. சற்றே தெளிவும் பிறந்தது. "மகாராணீ! உங்களை இக்கதிக்கு ஆளாக்கியவர்கள் நன்றாயிருக்க மாட்டார்கள்" என்று காவலன் ஆத்திரமாகச் சொன்னபோது கூட, "அவர்களை அப்படிச் சபிக்காதே எனக்குக் கெடுதல் செய்தவர்களுக்குக்கூட நான் கேடு நினைக்க மாட்டேன்" என்று ஈனஸ்வரத்தில் கருணையோடும் பரிவோடும் பதில் கூறினாள் மங்கம்மாள். அவளுடைய குரல் கிணற்றிற்குள்ளிருந்து வருவது போலிருந்தது.

அவளுக்குப் பருக நீர் அளித்தான் அவன். ஆனால் அந்த நிலையிலும் அவள் அதைப் பருக மறுத்துவிட்டாள்.

"ஊழியனே உன்மேல் எனக்கு எந்தக் கோபமுமில்லை! இதுவரை எனக்குப் பருக நீரோ உண்ண உணவோ தரக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்த என் பேரன் இன்றாவது தன் உத்தரவை மாற்றினானே என்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான். பாட்டி நிச்சயமாகப் பிழைக்கமாட்டாள் என்பது தெரிந்த பின்னாவது பேரனுக்குக் கருணை வந்ததே அந்த மட்டில் நிம்மதிதான். ஆனால் இதுவரை மானத்தோடு வாழ்ந்துவிட்ட நான் இன்று இந்த நீரைப்பருகி அதை இழக்க விரும்பவில்லை. தயவுசெய்து இப்போது என்னை நிம்மதியாகச் சாகவிடு; போதும்."

பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் கண்களில் நீர் மல்கியது. அவள் மேலும் தொடர்ந்தாள்:

"நான் சாவதற்குள் என் பேரனைப் பார்க்க முடியுமானால் எனக்கு அவனிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்க வேண்டும். அது தவிர இப்போது எனக்கு அவன்மேல் கோபமோ ஆத்திரமோ எதுவும் இல்லை."

"முதலில் தண்ணீரைப் பருகுங்கள் மகாராணி தயைகூர்ந்து மறுக்காதீர்கள்."