பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

227

"என் தாகத்தைத் தணிப்பதற்காக நீ தண்ணீர் தருகிறாய்! அது என் தாகத்தை அதிகமாக்குமேயல்லாமல் குறைக்காது அப்பா! நான் இவ்வளவு அவமானப்பட்டது போதாது. என்னை இன்னும் சிறிது அதிகமாக அவமானப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் உனக்கு இருந்தால் என்னைத் தண்ணீர் பருகும்படி நீ வற்புறுத்தலாம்."

இதைக் கேட்டபின் அந்தக் காவலன் நீர் பருகும்படி அவளை வற்புறுத்தவில்லை. அவள் மனநிலை அவனுக்கு நன்றாகப் புரிந்தது. விஜயரங்கனை அழைத்து வருவதற்காக ஓடினான். காவலன் விஜயரங்கனோடும் மந்திரிகள் பிரதானிகளோடும் அங்கே வந்து சேர்ந்தபோது ராணி மங்கம்மாளின் நிலை மேலும் கவலைக்கிடமாகி இருந்தது.

பேரனைப் பார்த்ததும் கண்களில் நீர் மல்கிப் பளபளக்க அவள் ஏதோ பேச முயன்றாள். ஆனால் குரல் எழவில்லை. தளர்ச்சியும், சோர்வும் பசியும் தாகமும் ஏற்கெனவே அவளை முக்கால்வாசி கொன்றிருந்தன.

விஜயரங்கன் அவள் அருகே வந்தான். அவனை வாழ்த்த உயர்வதுபோல் மேலெழுந்த அவளுடைய தளர்ந்த வலக்கரம் பாதி எழுவதற்குள்ளேயே சரிந்து கீழே நழுவியது. கண்கள் இருண்டு மூடின. நா உலர்ந்தது. தலை துவண்டு சரிந்து மடங்கியது.

விஜயரங்கனோடு வந்திருந்த வயது மூத்த பிரதானி ஒருவர், ராணி மங்கம்மாளின் வலக் கரத்தைப் பற்றிப் பரிசோதித்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார். "நாடி பேசவில்லை. குளிர்ந்துவிட்டது" என்றார். விஜயரங்கன் கூட இருந்தவர்களுக்காக ஏதோ அழுது புலம்புவது போலப் போலியாக நடித்தான்.

புகழ்பெற்ற ராணி மங்கம்மாளின் கதை முடிந்து விட்டது. பதினெட்டு ஆண்டுக்காலம் மதுரைச் சீமையை ஆண்ட மகாராணி மரணம் அடைந்துவிட்டாள். அன்னசத்திரங்களையும், ஆலயங்

ரா-15