பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

21

“எல்லா அழகான பெண்களுக்காகவும் அல்ல. இந்தச் சின்ன முத்தம்மாள் என்கிற ஒரே ஓர் அழகிக்காக மட்டும் தான் அதைச் செய்யமுடியும்.”

அவள் நாணித் தலைகுனிந்தாள். மணமுள்ள பூவுக்கு நிறம் போல அழகிய அவளுக்கு அந்த நாணம் மேலும் அழகூட்டியது. உயரத்திலும் வனப்பு வாய்ந்த கட்டழகுத் தோற்றத்திலும் முத்தம்மாள் ரங்ககிருஷ்ணனுக்கு இணையாக இருந்தாள். அந்த அரண்மனையிலேயே நம்பிக்கைக்குரியவளாக வளர்ந்த முத்தம்மாளும் ரங்ககிருஷ்ணனும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாகவும், பிரியமாகவும் நேசிப்பது ராணிமங்கம்மாளுக்குத் தெரிந்த விஷயம் தான். ஆனால் எல்லோருக்கும் ஒரு சிறிய சந்தேகமும் இருந்தது. நாயக்க வம்சத்தில் பலர் வைத்துக் கொண்டிருந்தது போல் அந்தப்புரத்து உரிமை மகளிரில் ஒருத்தியாக முத்தம்மாளை ஏற்றுக் கொள்வார்களா? அல்லது ரங்ககிருஷ்ணனின் பட்டத்தரசியாகவே ஏற்பார்களா என்பது சந்தேகத்துக்கிடமானதாயிருந்தது.

ராணி மங்கம்மாள் குடிப்பிறப்பு அந்தஸ்து என்றெல்லாம் பார்த்து எங்கே முத்தம்மாளை வெளிப்படையாகப் பட்டத்து மகிஷியாய் ஏற்காமல் அந்தப்புரத்து மகளிர் எனற அழகு மந்தைக்குள் தள்ளிவிடுவார்களோ என்னும் பயத்துக்குக் காரணமில்லாமலில்லை.

ராணி மங்கம்மாளை மணப்பதற்கு முன் அவள் கணவர் சொக்கநாத நாயக்கர் தஞ்சை நாயக்க அரசபரம்பரையைச் சேர்ந்த விஜயராகவ நாயக்கரின் வம்சத்தில் பெண்ணெடுக்க முயன்று முடியாமற் போயிற்று. காரணம், தஞ்சை நாயக்க வம்சம் விஜயநகர அரச வம்சத்துக்கு இணையான அந்தஸ்து உடையது என்றும், மதுரை நாயக்க வம்சம் அத்தகைய அந்தஸ்து உடையதில்லை என்றும் சொல்லப்பட்டது. அதிலிருந்தே தஞ்சை நாயக்க வம்சத்துக்கும் மதுரை நாயக்க வம்சத்துக்கும் விரோதம் நீடித்தது.

விஜயநகர மாமன்னராய் இருந்த அச்சுதராயரின் தங்கை கணவரான செல்லப்ப நாயக்கர் தஞ்சையில் ஆண்ட நாயக்க வம்சத்தின் முதல்வர். ஆனால் சொக்கநாத நாயக்கரோ பேரரசின்