பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

23

செய்வார்களோ அல்லது ரங்ககிருஷ்ணனின் சொந்த இலட்சியத்துக்காக முடிவு செய்வார்களோ என்ற கலக்கமும் ஐயமும் முத்தம்மாளுக்கே உள்ளூற இருந்தன.

“ஓர் அரச வம்சத்துக்கு இளவரசரின் திருமணம் என்பது அவனுடைய சொந்த ஆசையைப் பொறுத்தது மட்டுமில்லை. அவனது ஆசை மிகவும் சிறிய குறைந்த முக்கியத்துவமுள்ளதாகி அதைவிடப் பெரிய முக்கியத்துவமுள்ள ராஜதந்திர பிரச்சனைகளுக்காகவும் அது எதிர்பாராத விதமாக நடந்துவிடலாம். உலகில் பல அரச குடும்பங்களில் அப்படித்தான் நடந்திருக்கிறது“ என்றெல்லாம் முத்தம்மாளே ரங்ககிருஷ்ணனிடம் விளையாட்டாகவும் வினையாகவும் வாதிட்டிருக்கிறாள். இன்றும் கூட மதுரையிலிருந்து திரும்பியிருந்த இளவரசரிடம் அதேபோலச் சொல்லிப் பிணங்கினாள் அவள்.

“அரசகுமாரர்கள் காதல் வேட்கை மிகுதியால் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அளிக்கும் மோதிரங்கள் முத்து மாலைகள் எல்லாம் வரலாற்றில் துயரங்களின் சாட்சியாக நிரூபணமாகி இருக்கின்றனவே ஒழியச் சத்தியங்களின் சாட்சியமாகவோ சாத்தியங்களின் சாட்சியமாகவோ நிரூபணமானதாக ஒரு சின்ன உதாரணம் கூட இல்லையே இளவரசே?” “நீ அதிகம் தான் சந்தேகப்படுகிறாய் முத்தம்மா!”

“சாம்ராஜ்யாதிபதிகள் விஷயத்தில் சந்தோஷப்படுவதை விட அதிகம் சந்தேகப்பட வேண்டிய அவசியம் தான் இருக்கிறது இளவரசே! சகுந்தலை ஏமாந்தாள். காளிதாஸனுக்குக் காவியம் கிடைத்தது. என்னைப்போல் ஓர் அப்பாவி ஏமாந்தால் வரலாறுகூட அதை மறந்துவிடும். அல்லது மறைத்துவிடும்.”

“உனக்கு எதற்குக் காவியம் முத்தம்மா! நீயே ஒரு நடமாடும் காவியமாக இருக்கிறாயே?”

“எல்லா அரசகுமாரர்களுக்கும் எது தெரிகிறதோ தெரியவில்லையோ, வஞ்சகமில்லாமல் புகழத் தெரிகிறது. புகழ் என்பது செலவில்லாதது. சுலபமானது...! காற்றோடு போய்விடக் கூடியது.”