பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

ராணி மங்கம்மாள்

"உன் விஷயத்தில் அது இயற்கையானது. பொருத்தமானது. உன்னைப் புகழும்போது வார்த்தைகள் ஏழைமை அடைந்து விடுகின்றன. பொருள் வறுமைப்பட்டுப் போகிறது."

போதும் உங்கள் புகழ் என் தோழிகள் நந்தவனத்திலிருந்து திரும்புவதற்குள் நானும் அங்கு போக வேண்டும். இல்லையானால் அவர்களே இங்கு என்னைத் தேடிக்கொண்டு வந்துவிடுவார்கள். நான் போய் வருகிறேன்" என்று ரங்ககிருஷ்ணனிடமிருந்து விடுபட்டு நந்தவனத்துப் பக்கமாக நழுவினாள் முத்தம்மாள்.

பொற்சிலை போன்ற அவள் நடந்துசெல்லும் அழகை இரசித்தபடி நின்றான் ரங்ககிருஷ்ணன்.

எதிர்பாராத விதமாக அன்று அவனையும் திருவரங்கம் கோயிலுக்கு வரவேண்டும் என்று தாய் மங்கம்மாள் திடீரென்று வேண்டவே அவனும் நீராடித் தாயுடன் தரிசனத்துக்குப் புறப்பட வேண்டியதாயிற்று.

பல்லக்கில் போகும்போது தாய் அவனிடம் மீண்டும் டில்லி பாதுஷா விஷயத்தை அவளாகவே தொடங்கினாள்.

"ஒளரங்கசீப்பின் ஆட்கள் இங்கு வர இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம். அதற்குள் இங்கே சில முக்கிய மாறுதல்கள் நடந்தாக வேண்டும். இப்போது இந்த அரண்மனையிலுள்ள இரண்டுங்கெட்ட நிலை நீடிக்கக்கூடாது. நான் இதுவரை உனக்குப் பட்டம் சூட்டவில்லை. முழுமையாக நானேயும் ஆளவில்லை. கணவனை இழந்த நிலையில் ஏதோ சமாளிக்கிறேன். எதிரிகள் வந்து நம் கதவைத் தட்டும்போது எவ்வளவுதான் கெட்டிக்காரியாக இருந்தாலும் ஒரு பெண் என்ற முறையில் சிலவற்றை நான் எதிர்கொள்வதில் பல பண்பாட்டுச் சிக்கல்கள் உண்டாகும் மகனே! அந்நிய அரசன் அந்நிய மதத்தைச் சேர்ந்தவன். ஒரு செருப்பை அனுப்பிக் 'கும்பிடு' என்கிறான். என்னைப் போல் ஓர் அரச குடும்பத்துப் பெண் அதை ஆதரிக்கவும் முடியாது. எதிர்த்து அவமதித்தாலும் ஒரு பெண் அவமதித்து விட்டாளே என்ற உணர்வில் எதிரியின்ஆத்திரம் பலமடங்கு அதிகமாகும். எதிர்க்கவும் வேண்டும். நாம் எதிர்த்தது நியாயமென்றும் ஆண்மையென்றும்