பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

27

நிச்சயிக்கப்பட்டிருந்தது. ராணி மங்கம்மாளுக்கே அவளுடைய தாய் வீட்டுப் பெயராக 'அன்ன முத்தம்மாள்' என்பது திருமணத்துக்குமுன் வழங்கிய காரணத்தால் அரண்மனையிலேயே மங்கம்மாளுக்குத் துணையாகவும், உறவினராகவும் உடனிருந்த மூத்த பெண்கள் சிலர் பழைய பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியாமல் 'ராணிமுத்தம்மா' என்றே அழைத்தும் வந்தனர். அன்னமுத்தம்மாளான ராணி மங்கம்மாளுக்கும், இந்த இளம்வயது முத்தம்மாளுக்கும் ஓர் அடையாள வித்தியாசமாகத்தான் இவளைச் 'சின்னமுத்தம்மாள்' என்று அழைக்கத் தொடங்கியிருந்தார்கள்.

ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக விரைந்து மேற்கொள்ளப்பட்ட திருமண வைபவமும், முடிசூட்டு விழாவும் அளவு கடந்த கோலாகலத்தையும், குதூகலத்தையும் கொண்டிருக்கவில்லை. அரண்மனைச் சுற்றத்தையும், உறவினரையும்தவிர, அந்த ஆட்சியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு அங்கங்கே இருந்த படைத் தலைவர்களுக்கும், தளபதிகளுக்கும், தளவாய்களுக்கும், தலைக்கட்டுகளுக்கும் மட்டுமே அவசரம் அவசரமாக அழைப்புச்சொல்லி வரத் தூதுவர்கள் விரைந்து பாயும் புரவிகள் மூலம் அனுப்பப்பட்டனர்.

இந்த ஏற்பாடுகள் அரண்மனை வட்டாரங்களிலும் சுற்றத்தினரிடமும் இரண்டு விதமான வியப்பைக் கிளரச் செய்தன. பாதுகாப்பையும் அரசியல் உதவியையும் கருதி மங்கம்மாள் ஒரு பெரிய அரச வம்சத்தில்தான் பெண்ணெடுப்பாள் என்று நினைத்திருந்தவர்களுக்கு, அவள் சின்ன முத்தம்மாளைத் தேர்ந்தெடுத்தது வியப்பாயிருந்தது. திடீரென்று இந்த வைபவங்கள் ஏற்பாடு செய்யப்படுவானேன் என்பது மற்றொரு வியப்பாயிருந்தது. காரணம், இந்த ஏற்பாட்டில் சம்பந்தப்பட்டிருந்த ராஜதந்திரப் பிரச்னை பலருக்குத் தெரியாதிருந்ததுதான்.

திரிசிரபுரத்தில் அந்தத் திருமண வைபவமும், பட்டாபிஷேகமும் அதை ஒட்டி நடந்த பட்டணப் பிரவேசமும் நம்பமுடியாத வேகத்தில் நடந்து முடிந்தன. பட்டணப் பிரவேசம் நிகழ்ந்து அரண்மனை திரும்பியதுமே முடிசூடிய கோலத்தில் பட்டத்தரசியாகச் சின்னமுத்தம்மாளையும் அருகிலழைத்துக்