பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

29

அழகும் - அழகில்லாத கெட்டிக்காரத்தனமும் அரசியல் காரியங்களுக்குப் பயன்படுவதில்லை பெண்ணே!"

சின்ன முத்தம்மாள் இதைக் கேட்டுப் பவ்யமாக நாணித் தலை குனிந்தாள். அவர்கள் இருவரையும் விடைகொடுத்து அனுப்பிவிட்டு இராயசத்தை அழைத்துச் சில உத்தரவுகள் போட்டாள் ராணி மங்கம்மாள்.

மறுநாள் பொழுது புலரும் பொழுது காவிரிக்கரையில் கதிரவன்கூட ஆவலோடு உதித்தாற் போலிருந்தது. திரிசிரபுரம் கோட்டையில் அரசவை கூடியபோது பட்டம் சூடிக்கொண்ட ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன் அரியணையில் கம்பீரமாகக் கொலு வீற்றிருந்தான்.

அந்தப்புரப்பகுதியிலிருந்து புறப்பட்டு வந்து அப்படியே மேல் மாடத்து உப்பரிகையிலிருந்து அரசவையைக் காண முடிந்த வகையில் ராணி மங்கம்மாளும் சின்ன முத்தம்மாளும் அங்கே அமர்ந்திருந்தார்கள்.

பட்டம் சூடிப் பதவியேற்றிருக்கும் இளவரசைப் புகழ்ந்து தமிழ்ப் புலவர்களும், சில தெலுங்குப் புலவர்களும் கவிதை பாடினார்கள்.

சபையும், அரசரும் கவிதைகளை இரசித்துக் கொண்டிருக்கும் போதே, "டில்லி பாதுஷாவின் பிரதிநிதியும், ஆட்களும் கோட்டை வாசலில் காத்திருக்கிறார்கள்"என்று தகவல் வந்தது. அவர்களை உள்ளே அழைத்து வரச்சொல்லி ரங்ககிருஷ்ண முத்து வீரப்பன் சிறிதும் தயங்காமல் உடனே எதிர்கொள்ள ஆயத்தமானான்.

யானையைக் கோட்டை வாசலிலேயே நிறுத்திவிட்டு அதன்மேல் அம்பாரியிலிருந்த ஒளரங்கசீப்பின் பழைய செருப்பை அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு பழுக்காத்தாம்பாளத்தில் எடுத்து வைத்துக்கொண்டு உடன் வந்திருந்த வீரர்கள் பின் தொடர ஆடம்பரமாகவும் படாடோபமாகவும் உள்ளே நுழைந்தான் பாதுஷாவின் பிரதிநிதி.