பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

ராணி மங்கம்மாள்


நெடுந்தூரம் பயணம் செய்திருந்த களைப்பாலும் எங்கேயும் யாரும் எதிர்த்துப் போரிடாததாலும் டில்லியிலிருந்தே உடன் வந்திருந்த படை வீரர்களில் பெரும் பகுதியினரை அநாவசியம் என்று கருதி மதுரையிலிருந்தே அவசரப்பட்டு வடக்கே திருப்பி அனுப்பியிருந்தான் அந்தப் பிரதிநிதி.

"இளவரசருக்கு உடல்நலமில்லை. திரிசிரபுரம் திரும்புகிறார்" என்று மதுரை தமுக்கம் மாளிகையிலிருந்து ராணி மங்கம்மாள் திண்டுக்கல்லுக்கு அனுப்பியிருந்த தகவல் வேறு டில்லியிலிருந்து வந்திருந்த ராஜப்பிரதிநிதியின் வேகத்தைத் தடுத்துப் போதுமான அளவு குழப்பியிருந்தது.

எல்லாரும் தலைவணங்கிவிட்ட செருப்புக்கு ரங்க கிருஷ்ணமுத்து வீரப்பனும் மறுக்காமல் தலைவணங்கி விடுவான். படை பலத்தைக் காட்டி அவனை மிரட்டவேண்டிய அவசியம் இராது. தானும் சில வீரர்களும் பழைய செருப்புடன் திரிசிரபுரம் சென்றாலே போதுமானது என்ற முடிவுடன்தான் அந்தப் பிரதிநிதி அன்று அங்கே வந்திருந்தான்.

டில்லி பாதுஷாவின் பிரதிநிதி வேகம் குறைந்து குழம்பி விடவேண்டும் என்பதை எதிர்பார்த்துத்தான் மதுரையிலேயே அவனை எதிர்கொண்டு சந்திக்காமல் கவனத்தைத் திசை திருப்பி மகனுக்கு உடல் நலமில்லை என்று சொல்லித் திரிசிரபுரம் திரும்பியிருந்தாள் ராணி மங்கம்மாள்.

"இத்தனைபேர் எதிர்க்காத பாதுஷாவின் செருப்பை ஒரு விதவையைத் தாயாகக் கொண்ட நோயுற்ற ஓர் இளவரசனா எதிர்க்கப் போகிறான்?"-என்று நினைத்து மிகவும் அலட்சியமாகவும் சற்று அஜாக்கிரதையாகவும் திரிசிரபுரத்துக்கு வந்திருந்தான் டில்லி பாதுஷாவின் பிரதிநிதி.

பாதுஷாவின் பிரதிநிதியை எதிர்கொண்டு வரவேற்று அவையில் அமரச் செய்தான் ரங்ககிருஷ்ணன். இராயசத்தை அழைத்துத் தந்தை சொக்கநாத நாயக்கரின் மறைவுக்குப் பின் தாய் வழக்கமாக டில்லி பாதுஷாவுக்குச் செலுத்தி வந்த கப்பத் தொகையையும் கூட முறையாகச் செலுத்தச் செய்தான். பெருமக்கள்