பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

31

நிறைந்திருந்த அந்த ராஜ சபையில் பாதுஷாவின் பிரதிநிதியையும் உடன் வந்திருந்தவர்களையும் அதிகபட்ச முகமலர்ச்சியோடும் விநயத்தோடும் மரியாதையோடும் நடத்தினான் ரங்ககிருஷ்ணன்.

ஒரு சுவாரஸ்யமான ஏற்கெனவே நன்கு ஒத்திகை செய்யப்பட்ட நாடகத்தைப் பார்ப்பதுபோல் மேலே உப்பரிகையிலிருந்து ராணி மங்கம்மாளும் சின்ன முத்தம்மாளும் அவையில் நடப்பதை எல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். பாதுஷாவின் பிரதிநிதிக்கும் ரங்ககிருஷ்ணனுக்கும் உரையாடல் தொடர்ந்தது.

"இளவரசருக்கு உடல் நலமில்லை என்பதாகச் சொன்னார்கள். இப்போது எப்படியோ?”

"நோயும் விருந்தும் எப்போதாவது வரக்கூடியவை. இப்போது தாங்கள் வந்திருப்பதைப் போல..."

"நோயாக வந்திருக்கிறேன் என்கிறீர்களா? விருந்தாக வந்திருக்கிறேன் என்கிறீர்களா?"

"நான் விருந்தென்று எண்ணித்தான் சொன்னேன். தங்களுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி வைத்துக் கொள்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை."

"முடிசூடிப் பட்டமேற்றுக்கொண்டபின் இளவரசருக்கு மிகவும் சாதுரியமாகப் பேச வருகிறது."

பேச்சு மட்டு அப்படி என்று பாதுஷாவின் மேலான பிரதிநிதி அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது."

"தங்கள் தாய் மகாராணி மங்கம்மாள் இப்படியெல்லாம் சாமர்த்தியமாகப் பேசுவதில் நிபுணர் என்று கேள்வி..."

"மறுக்கவில்லை. ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் என்னோடுதான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்."

"பாதுஷாவின் புதிய நிபந்தனை இளவரசருக்கும் மகாராணிக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்"

"எப்போது நிபந்தனை புதிதோ அப்போது அதை நீங்களே வெளிப்படையாகச் சொல்லிவிடவேண்டியதுதான் முறை."