பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

ராணி மங்கம்மாள்

பதில் பேசாமல் பாதுஷாவின் பிரதிநிதி தன்னுடன் வந்திருந்த வீரர்களில் ஒருவனுக்குச் சைகை காட்டி அழைத்து ஏதோ கூறினான்.

உடனே அந்த டில்லி வீரன் பட்டுத்துணியிட்டு மூடியிருந்த பழுக்காத் தாம்பாளத்தை அப்படியே அரியணைக்கு முன்பிருந்த அலங்கார மேடையில் வைத்துவிட்டுத் துணியை நீக்கினான்.

தாம்பாளத்தில் ஒளரங்கசீப்பின் பழைய செருப்பு ஒன்று இருந்தது. அதைக் கண்டவுடன் ரங்ககிருஷ்ணனின் முகத்திலிருந்த மலர்ச்சியும் புன்னகையும் மறைந்தன. மீசை துடிதுடித்தது. ஆனாலும் பொறுமையை இழந்துவிடாமல் கேட்டான்.

"என்ன இது?"

"டில்லி பாதுஷாவின் பாதுகை." .

"டில்லி பாதுஷா மற்றொரு காலுக்குச் செருப்பே போட்டுக் கொள்வதில்லையா?”

"மரியாதையாகப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள் இளவரசே! பாதுஷா கப்பம் வாங்குகிறவர். நீங்கள் கப்பம் கட்டுகிறவர்; ஞாபகமிருக்கட்டும்."

“மரியாதை என்பது கொடுத்துப் பெற வேண்டியது. கேட்டுப் பெறக்கூடியது இல்லை."

"மறுபடியும் எச்சரிக்கிறேன். நீர் கப்பம் கட்டுகிறவர். பாதுஷா வாங்குகிறவர்."

"அவர் கப்பத்தை வாங்கலாம். மானத்தை வாங்கிவிட முடியாது. கூடாது."

"டில்லிப் பேரரசுக்கு அடங்கிக்கப்பம் கட்டுகிற அனைவரும் இந்தப் பாதுகையை வணங்கவேண்டும் என்பது பாதுஷாவின் புதிய கட்டளை."

"தெய்வங்களின் திருவடிகளைத்தான் பாதுகை என்று சொல்வதும், வணங்குவதும் எங்கள் வழக்கம். மனிதர்களின் பழைய செருப்பை நாங்கள் பாதுகையாக நினைப்பதில்லை."