பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

ராணி மங்கம்மாள்

சந்திக்க வேண்டுமென்று ராணி மங்கம்மாளிடமிருந்து வந்த ஆள் கூறி விட்டுப் போயிருந்தான். அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த சின்ன முத்தம்மாளை எழுப்பாமலே தாயையும் இராயசத்தையும் சந்திக்கச் சென்றான் அவன். இன்னும் இருள் பிரியவில்லை. காற்று சில்லென்றிருந்தது.

தன் தாயோடு அரண்மனை இராயசமான அச்சையாவும் கூட இருக்கிறார் என்றறிந்ததுமே ஏதோ மிகவும் இன்றியமையாத காரியத்தைப்பற்றி ஆலோசனை நடக்கிறது என்பதை முன்கூட்டியே முத்து வீரப்பன் அநுமானம் செய்துகொள்ள முடிந்தது. தாயின் நம்பிக்கைக்குரியவர் அச்சையா என்பதை அவன் அறிவான். அதிகமான செயல்திறமையும் மிகக் குறைவான வார்த்தைகளையும் உடையவர் அவர் மிகப்பெரிய ராஜதந்திரியான அவர் எதிரே நின்று பேசுகிறவர்களை பயபக்தியோடு தம்மை அணுகச் செய்து விடும் ஆஜானுபாகுவான சுந்தரபுருஷர். தீர்க்கமாகப் பார்க்கும் ஒளி நிறைந்த கண்களும், கூரிய நாசியும், விசாலமான நெற்றியும், அழுத்தமான உதடுகளுமாக அச்சையாவை ஏறெடுத்துப் பார்க்கும் யார்க்கும் அவர் முன் ஒரு பணிவு தானாக வந்து விடும். அள்ளி முடித்த குடுமியும், நெற்றியில் சந்தனத் திலகமுமாக அவர் சிரிக்கும்போது வெளேரென்று தெரியும் அழகான அளவான பல் வரிசை யாரையும் வசியப்படுத்திவிடக் கூடியது. நின்றால் பரந்த மார்பும் திரண்டபுஜங்களுமாக முழங்காலைத் தொடக்கூடிய நீண்ட கரங்களோடு எடுப்பும் ஏற்றமுமாகக் காட்சியளிப்பார் அச்சையா. அசைப்பில் கோயில் ராஜகோபுரம் எதிரே நிற்பது போல இருக்கும்.

இப்படிஅச்சையாவைப் பற்றிய கம்பீரமான நினைப்புகளுடன் அவன் மந்திராலோசனை மண்டபத்திற்குள் நுழைந்தபோது,

"வா மகனே காரியம் மிகவும் அவசரமானது அதனால் தான் உன்னைத் தூக்கத்திலிருந்துங்கூட எழுப்பிவிட்டேன்" என்றாள் தாய். தாயையும், இராயசம் அச்சையாவையும் வணங்கி விட்டு அமர்ந்தான் முத்து வீரப்பன்.

"தூங்கிக் கொண்டிருந்தால் கூட என்னை விழிப்பூட்டுவது உங்கள் கடமை அம்மா!"