பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

ராணி மங்கம்மாள்

சேதுபதி, பெரிதும் உதவியாயிருந்து உன் தந்தையை அவனிடமிருந்து காப்பாற்றினார். அதற்குப் பிரதியாக உன் தந்தை கிழவன் சேதுபதிக்குப் பரிசில்களும் விருதும் கொடுத்துப் பாராட்டியதோடு தன்னிடமிருந்த அதி புத்திசாலியான குமாரப்ப பிள்ளை என்ற தளவாயையும் சேதுபதிக்கு உறுதுணையாக ஆட்சிப் பணிபுரிய இராமநாதபுரம் அனுப்பி வைத்தார்.

"உன் தந்தையால் அனுப்பப்பட்ட அந்த அரிய மனிதரான குமாரப்ப பிள்ளையைக் குடும்பத்தோடு கொலை செய்து இப்போது பழிதீர்த்துக் கொண்டு விட்டார் கிழவன் சேதுபதி. நமது ஆட்சிப் பிடிப்பின்கீழ் சிற்றரசராக இருக்க விரும்பாத சேதுபதி தஞ்சைநாயக்க மன்னர் பரம்பரையின் வாரிசான செங்கமலதாசனுடனும், பழைய மதுரைத் தளவாய் வேங்கட கிருஷ்ணப்பனோடும் சேர்ந்து நமக்கு எதிராகச்சதி செய்தபோது அந்தச் சதியை எதிர்த்து அதற்கு உடன்பட மறுத்தார் என்ற ஒரே காரணத்துக்காகக் குமாரப்ப பிள்ளை குடும்பத்தோடு கொல்லப்பட்டிருக்கிறார்."

"நல்லது சொல்லியவருக்கு இப்படி ஒரு கொடுந் தண்டனையா?"

"நம்மையும் நமது ஆட்சியையும் அழிப்பதற்குப் பரிசாகத் தனக்கு உதவி செய்ய முன்வரும் தஞ்சை மன்னனுக்குப் புதுக்கோட்டைக்கும், பாம்பாற்றுக்கும் இடைநிலப் பகுதியில் வரி வாங்கும் உரிமையை விட்டுக் கொடுத்திருக்கிறார் சேதுபதி. இந்த நன்றி உணர்வற்ற சதியை முறியடித்துச் சேதுபதியையும் வேங்கட கிருஷ்ணப்பனையும் திருத்த முயன்றபோது தான் குமாரப்பபிள்ளை கொல்லப் பட்டிருக்கிறார்."

"நமக்கு வேண்டியவரைக் கொன்றால் என்ன? நம்மைக் கொன்றால் என்ன?"

"இந்த விசுவாச உணர்வுதான் நம்மைக் காக்கக்கூடியது முத்து வீரப்பா! கிழவன் சேதுபதி முரட்டு மனிதர் மனித வாழ்வை அர்த்தமுள்ளதாகச் செய்யக்கூடிய எந்த இங்கிதமான உணர்வுகளும் இல்லாதவர். ஆட்சியையும், செல்வத்தையுமே மதிப்பவர். நாம் அவருக்குப் பாடம் கற்பிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது."