பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

39

"இப்போதே படைகளோடு புறப்படுகிறேன். பாடமும் புகட்டுகிறேன்."

"அது அத்தனை சுலபமானதில்லை மகனே மறவர் சீமையின் கிழட்டுச் சிங்கத்தை எளிதாக வென்றுவிட முடியாது. இரகுநாத சேதுபதி மற்ற மறவர்களை அழைத்துத் தலையைக் கொடு என்றாலும் கொடுத்துவிடுவார்கள். அவ்வளவு செல்வாக்கும் கட்டுப்பாடும் அங்கே அவருக்கு உண்டு."

"நன்றியும், விசுவாசமும் இல்லாத இடத்தில் எத்தனைக் கட்டுப்பாடு இருந்தால் என்ன எவ்வளவு செல்வாக்கு இருந்தால் என்ன?”

"உன் கேள்வியிலுள்ள நியாயம் கூட புரியாத வன்கண் மறவர் அவர். அவருடைய சக மறவர்கள் அவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள். ஆகவே அவருக்கு ஆள்கட்டு அதிகம். ஒரு பாவமும் அறியாத அந்நிய நாட்டுக் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் கூட அவருடைய கொடுமைக்குத் தப்ப முடியவில்லை மகனே!"

"சொந்த நாட்டு நண்பர்களிடமே விசுவாசமாயில்லாத ஒருவர் அந்நிய நாட்டுப் பாதிரிமார்களிடம் கருணை காட்டுவார் என்று எப்படி அம்மா நீங்கள் எதிர்பார்க்க முடியும்?"

"உன் கொள்ளுப் பாட்டனார் திருமலை நாயக்கரும், தந்தையாரும் கிறிஸ்தவப் பாதிரிமார்களையும், அவர்களைப் பின்பற்றியவர்களையும் கூட அன்போடும் ஆதரவோடும் பெருந்தன்மையாக நடத்தினார்களே?.."

"என் கொள்ளுப் பாட்டனாருக்கு இருந்த பெருந்தன்மையும் தந்தைக்கு இருந்த தாராள மனமும் கிழவன் சேதுபதிக்கு இல்லையானால் அதற்கு யார் என்ன செய்ய முடியும் அம்மா?"

"கிழவன் சேதுபதியால் கொல்லப்பட்ட குமாரப் பிள்ளை கூடக் கிறிஸ்தவ வெறுப்பில் கிழவன் சேதுபதியை மிஞ்சியவராக இருந்திருக்கிறார். பாதிரிமார்களையும், உபதேசியார்களையும் பலாத்காரமாகச் சிவலிங்கத்தை வழிபடும்படி வற்புறுத்துகிறார் அவர்" என்றார் இராயசம் அச்சையா.