பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

45

கொடுத்தனர். பழைய செருப்போடு வந்த டில்லி பாதுஷாவின் ஆட்களை எதிர்க்கும் அவசியத்துக்காக அங்கங்கே சேர்த்து வைத்திருந்த படை வீரர்களையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு ரங்ககிருஷ்ணன் மறவர் சீமை மேல் படையெடுத்திருந்தான்.

தனக்கு மாலை சூட்டி வீரத்திலகமிட்டு வழியனுப்பும் போது சின்ன முத்தம்மாளின் கண்களில் நீர் திரண்டு பிரிவுத்துயரம் பொங்கியதை அத்தனை அவசரத்திலும் அத்தனை பரபரப்பிலும் அவன் கவனிக்கத் தவறியிருக்கவில்லை. உலகின் மிகப் பல பாமர மக்களில் கணவனும் மனைவியுமாக மாலை மாற்றிக் கொள்கிறவர்களுக்கு இருக்கும் உரிமையும் இன்பமும் சுகமும் நிம்மதியும் கூட அரச குடும்பத்தினரான மற்றவர்களுக்கு இல்லையே! என்று எண்ணிச் சின்ன முத்தம்மாள் ஏங்கியிருக்கக் கூடும். திருமணமான உடனேயே போருக்காகப் படையோடு புறப்பட்டுவிட்ட கணவனை வீரமங்கையாகத் திலகமிட்டு வழியனுப்பினாலும், பிரிவு பிரிவுதானே ? படைகளை நடத்திச் செல்லும்போது இதை எல்லாம் எண்ணிப் பார்த்தான் ரங்ககிருஷ்ணன்.

முதல்நாள் பகல் பொழுது முடிந்து அந்தி சாய்ந்ததும் காடாரம்பமான ஓரிடத்தில் இரண்டு மூன்று பெரிய ஆலமரங்கள் இருந்த பகுதியில் படைகள் பாசறை அமைத்துத் தங்க நேர்ந்தது. இன்னும் மறவர் சீமை எல்லைக்குப் போய்ச்சேரவில்லை என்றாலும், வீரர்களிடம் போர் உணர்ச்சி இப்போதே வந்திருந்தது. மறவர் சீமையை அடைந்த உடனேயே போர் நிகழலாம் என்ற பிரக்ஞையும் எல்லாருக்கும் வந்திருந்தது. ரங்ககிருஷ்ணனைப் பொறுத்தவரை இதுதான் அவனது முதற் படையெடுப்பு என்று சொல்லவேண்டும். அவசர அவசரமாக நிகழ்ந்த திருமணம். அவசர அவசரமாக நிகழ்ந்த முடிசூட்டு விழாஇப்போது அவசர அவசரமாக வாய்த்துவிட்ட இந்தப் படையெடுப்பு எல்லாமே நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் நேர்ந்திருந்தன.

நள்ளிரவாகியும் பாசறைக் கூடாரத்தில் உறக்கமின்றித் தவித்தான் ரங்க கிருஷ்ணன். பல்வேறு வகைப் படைவீரர்கள் தங்கியிருந்த பகுதிகளில் கூத்துகளும், களியாட்டங்களும் நடை நடை