பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

47

கொண்டுவிட்டபின் தன் தரப்பிலிருந்து பணிந்து போவது என்பது பிறர் எள்ளி நகையாடக் காரணமாகிவிடலாம். குமாரப்ப பிள்ளையைக் குடும்பத்தோடு கொன்றது போதாதென்று மறவர் சீமையைச் சுயாதீனமுள்ள நாடாகப் பிரகடனம் செய்ததும் சேர்ந்து தவிர்த்திருக்க வேண்டிய இந்தப் படையெடுப்பை அவசியமும் அவசரமும் உள்ளதாக்கிவிட்டன. அநாவசியமான விரோதத்தை தேடுவது எப்படி ராஜ தந்திரமில்லையோ, அப்படியே அவசியமாக வந்து வாயிற் கதவைத் தட்டி அழைக்கும் விரோதத்தைத் தவிர்ப்பதும் ராஜதந்திரமில்லை. சேதுபதியைக் கண்டு ராணி மங்கம்மாளும் அவள் மகனும் பயப்படுகிறார்கள் என்று பிறர் பேசவும் இடம் கொடுத்து விடக்கூடாது.

கிழவன் சேதுபதியைப் பொறுத்தவரை இந்த விரோதத்தை உடனடியாகத் தேடுவதில் பயன் இருந்தது. இந்த விரோதத்தால் அவருக்கு ராஜ தந்திரப் பயன்களும் ஊதியமும் இருந்தன. ஆகவே அவர் இதைத் தேடியதில் அவரளவுக்குக் காரணம் சரியாயிருந்தது. அவரளவுக்கு அரசியல் நோக்கமும் சரியாக இருந்தது.

தன் கூடாரத்தை விட்டு வெளியேறி வீரர்களின் மனநிலையைக் கண்டறிய இருளில் புறப்பட்டபோது ரங்க கிருஷ்ணனின் மனத்தில் இவ்வளவு சிந்தனைகளும் இழையோடின. அடுத்திருந்து கெடுதல் செய்பவனின் விரோதத்தை விலை கொடுத்தாவது பெற்றாக வேண்டும் என்றாலும் கொடுக்கவேண்டிய விலை என்னவாக இருக்கும் என்பது இந்த வினாடிவரை புரியாமல் இருந்தது. சிந்தனை வயப்பட்டவனாக ஆல மரத்தடியில் சில வீரர்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்த பகுதிக்கு வந்திருந்தான் அவன். அவர்களுடைய பேச்சும் கிழவன் சேதுபதியைப் பற்றியதாயிருக்கவே ஆலம் விழுது ஒன்றின் மறைவில் ஒதுங்கி நின்று அதை ஒட்டுக்கேட்கலானான்.

"நமக்குச் சோறு போட்டு வளர்ப்பது நாயக்கவம்சம். நாம் எதிர்த்துக் கொள்ள முடியாத சுயஜாதி மனிதர்களில் மிகவும் பெரியவர் இரகுநாதசேதுபதி. இந்த யுத்தம் தர்ம சங்கடமானது.சோறு போடுகிறவர்களுக்கு விசுவாசமாக இருப்பதா? இனத்துக்கு