பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

49

சேதுபதி வாராருன்னா ஊருக்குள்ளாற ஒருத்தன் மார் மேலே துணியோ, கால்லே செருப்போ போட்டுகிட்டு நடமாடமாட்டான் அண்ணே அத்தனை மருவாதி(மரியாதை) அவருக்கு உண்டு."

இருளில் அங்கு உரையாடிக் கொண்டிருந்த படைவீரர்களனைவரும் மறவர் இனத்தினர் என்பதை ரங்ககிருஷ்ணனால் மிக எளிதாகவே அநுமானம் செய்துகொள்ள முடிந்தது. தன்னை அவர்கள் பார்த்து விடாதபடி மெல்ல அங்கிருந்து விலகிச் சென்றான் ரங்க கிருஷ்ணன். டில்லி பாதுஷாவை எதிர்க்க ஆவேசத்தோடு ஒன்று திரண்ட படை, சேதுபதி விஷயத்தில் அப்படி ஒன்றாக இல்லை என்று புரிந்தது.

துணிவும், தன்னம்பிக்கையும் கொண்டிருந்த ரங்க கிருஷ்ணனின் உறுதியான உள்ளத்திலும் மெல்ல எழுந்தது ஒரு சிறு தயக்கம். இந்தப் போரிலுள்ள பகை பக்கத்து வீட்டுப்பகை என்பதால் ஏற்படும் படை வீரர்களின் விசுவாசத் தயக்கங்களையும், இடம் மாறிய முறை மாறிய விசுவாசங்களையும் எல்லை மாறக்கூடிய சந்தேகத்துக்கிடமான நம்பிக்கைகளையும் பற்றிய கலக்கம் அவன் மனத்தில் இப்போது இந்நள்ளிரவில் புதிதாக ஏற்பட்டது. வெளியே சூழ்ந்திருந்த இருள் தன் மனத்துக்குள்ளும் கொஞ்சம் புக முயல்வதைப்போல உணர்ந்தான் ரங்க கிருஷ்ணன். கடவுள் மனிதர்களைப் படைத்தபோது உலகைப் பற்றி வைத்திருந்த சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் மனிதர்கள் ஜாதிகளையும் சமயங்களையும் உண்டாக்கிக் கெடுத்துக் கொண்டுவிட்டார்களே என்று அந்தக் கணத்தில் அவனுக்குத் தோன்றியது.

அபிமானம், அன்பு, விசுவாசம், நன்றிக் கடமை ஆகிய ஜாதி சமயம் கடந்த உயரிய மனிதகுணங்களைக் கூட ஜாதி சமயங்கள் பாதிக்க முடியும் என்பது இப்போது அவனுக்குப் புரிந்தது. அவன் சிந்தனை வயப்பட்டான். அன்றிரவு பாசறையில் அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.

ரா-4