பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

53

குவிப்போர் உல்லாசமாகப் பாடியபடி வேலைகளில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். தெருக்களில் போவோர் வருவோரும், சாவடிகளில் அமர்ந்து வம்புபேசுவோரும் கவலையின்றி உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். மரத்தடிகளிலும், வீட்டு முற்றங்களிலும் தாளலயத்தோடு உரலில் நெல் குத்தும் பெண்கள் [1]வள்ளைப்பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள். பயத்தையும் போர் வந்திருப்பதையும் இவர்களுக்கு நான் எப்படித்தான் அப்பா உணர்த்துவது?"

"யாரோ சொல்லித் தூண்டி இப்படி இருக்கச் சொல்லியதால் இவர்கள் இப்படி இருக்கவில்லை மகாராஜா! இது இம்மக்களின் இயல்புகளில் ஒன்று."

முத்துராமலிங்க பூபதியின் இந்தப் பதிலைக் கேட்டுச் சந்தேகத்தோடு அவன் முகத்தை ஊடுருவிப் பார்த்தான் ரங்ககிருஷ்ணன். தனது சந்தேகத்தைக் கூட அந்த முரட்டு மறவன் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரங்ககிருஷ்ணன் தன் மனத்தில் அப்போது பெருகும் தாழ்வு மனப்பான்மையைத் தவிர்க்க முடியாமல் தவித்தான். போரைத் தொடங்குவதற்கு முன்பே எதிரில் கூட வராமலே தன் எதிரியின் மனத்தில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிட்ட அந்தக் கிழட்டுச் சிங்கம் இரகுநாத சேதுபதியின்மேல் ஆத்திரம் ஆத்திரமாக, வந்தது அவனுக்கு. அவன் மனநிலை புரியாமல் "இந்த இராமநாதபுரம் சீமைக்காரர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும் பயமும் கலக்கமும் என்னவென்று புரியவைப்பது சிரமம் மகாராஜா" என்றான் முத்துராமலிங்க பூபதி. நிஷ்களங்கமாக அவன் இப்படிக் கூறியவுடன், நீ இந்தச் சீமையைச் சேர்ந்தவன் என்ற திமிரில் பேசுகிற பேச்சா இது? என்று சுடச்சுடக் கேட்க வேண்டும் போலிருந்தது ரங்ககிருஷ்ணனுக்கு வாய் நுனிவரை வேகமாகவந்து விட்ட அந்த வார்த்தைகளைக் கேட்டுவிடாமல் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.


  1. உரலில் நெல் குத்தும்போது பாடும் பாட்டு