பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

59

தங்கியிருந்த மானாமதுரையிலிருந்து அப்படியே படைகளைத் திருப்பிக் கொண்டு திரிசிரபுரம் போகவும் அவனால் முடியாது. பொழுது விடிகிற வரை ஒரே மனக்குழப்பமாயிருந்தது அவனுக்கு. விடிந்ததும் ஒரு முடிவு கிடைத்தது. எப்படியும் இராமநாதபுரம் சென்று சேதுபதியை நேருக்கு நேர் சந்திக்காமல் எதையும் முடிவு செய்வதற்கில்லை என்ற எண்ணத்துடன் படைகளோடு இராமநாதபுரம் நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தான் அவன். தாய்க்கும் ஒரு தூதுவன் மூலம் நிலைமையைச் சொல்லி அனுப்பினான்.

கோடையின் பகல் நேரம். பயணத்தில் வெப்பம் அதிகமாயிருந்தது. இந்தப் படைகள் மறவர் சீமைக்குள் நுழைந்து தலைநகரை நோக்கி விரைந்தது, அந்தச் சீமையின் சிற்றூர்களையும், பேரூர்களையும், மக்களையும் எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்று தெரிந்தது. அந்த அலட்சியமும் தற்செருக்கும் ரங்க கிருஷ்ணனின் மனத்தில் அந்தரங்கமாக உறுத்தின. கண்மூடித்தனமாகத் தன்னை ஏற்று வழிபடும் மக்களை நம்பித்தான் சேதுபதி இத்தனை இறுமாப்போடு இருக்கிறார் என்பது புரிந்தது. பொதுமக்களோ படை வீரர்களின் கட்டுப்பாட்டோடும், உறுதியோடும், ஒழுக்கத்தோடும் இருக்கிற தேசத்தில், அந்நியர்கள் புகுந்து தொல்லைப்படுத்தவே முடியாதுதான். மறவர் சீமையின் தலைநகரான இராமநாதபுரத்தை நெருங்க நெருங்க இந்தக் கட்டுப்பாடு வெளிப்படையாகவே புரிந்தது. சேதுபதியின் வலிமையே இந்தக் கட்டுப்பாடுதான் என்று விளங்கியது.

அப்போது தானும் தன் படைவீரர்களும் மறவர் சீமைமேல் படையெடுத்து வந்திருப்பதும், தனக்கும் தன் தாய்க்கும் குமாரப் பிள்ளையைக் கொன்ற விஷயமாகவும், மறவர் நாட்டைச் சுயாதீனப் பிரகடனம் செய்ததன் மூலமாகவும் ஏற்பட்டிருக்கும் மனத் தாங்கல்கள், இவை எல்லாம் சேதுபதிக்குப் புரியாமல் இருக்கும் என்று ரங்ககிருஷ்ணன் நினைக்கவில்லை. திரிசிரபுரத்துக்குச் சுயாதீனப் பிரகடனம் செய்து மறவர் சீமையிலிருந்து தூதன் அனுப்பப்பட்ட விதம், இப்போது இந்தப் படையெடுப்பை எதிர்கொள்ளும் பாணி எல்லாவற்றிலுமே சேதுபதியின் அலட்சியப்போக்கு தெரிவதை ரங்ககிருஷ்ணனால் உய்த்துணர முடிந்தது.