பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

61

சேதுபதியைக் குறைத்துப் பேசவோ விட்டுக் கொடுக்கவோ செய்யாத உறுதி இருப்பதைப் புரிந்துகொண்டான் ரங்ககிருஷ்ணன். இப்படிப்பட்ட படை வீரர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்ற மலைப்பு அவனுக்கு ஏற்பட்டது. அமைதியாகவும் இயல்பாகவும் இருக்கிற மக்களை எதிர்த்துத் தாக்குவதும் பொருத்தமாகப்படவில்லை. மறவர் சீமையைச் சேராத விஜயநகர வாரிசுகளாகிய இரண்டொரு சுயஜாதிப் படைத்தலைவர்களையும் நடுநடுவே அழைத்துத் தன் சந்தேகத்தைத் தெரிவித்து யோசனை கேட்டபோது அவர்கள் அனைவரும் ரங்ககிருஷ்ணனின் சந்தேகத்தை உறுதிப்படுத்தினார்கள்.

சேதுபதி வேண்டுமென்றே நாடகமாடுகிறார். அவருடைய நாடகத்தையும், பாசாங்கையும் கலைத்து அவரை உண்மையான கோபத்தோடு வெளிவரச் செய்ய எந்தத் தீவிரமான செயலில் இறங்குவது என்றுதான் புரியாமலிருந்தது. முன்னுக்குப் போனாலும் இடித்தது. பின்னால் நகர்ந்தாலும் உரசியது.

உண்மைப் போரைத் தொடங்குவதற்கு முன்பே தன் எதிரியைச் சொந்த மனப் போராட்டங்களிலேயே சிக்கித்தவித்துத் திணறும்படிச் செய்துவிட்ட கிழவன் சேதுபதியின் அரசியல் முதிர்ச்சியும், பக்குவமும், பிரமிக்கும்படி இருந்தன.

ரங்ககிருஷ்ணனுடைய படைவீரர்களும் அவனும் இராமநாதபுரத்தை அடைவதற்குள் திரிசிரபுரத்திலிருந்து ஒரு தூதுவனைத் தாய், மங்கம்மாள் அனுப்பியிருந்தாள். வந்து சந்தித்த அந்தத் தூதுவன் ஓர் ஓலையை அளித்திருந்தான்.

'ரகுநாத சேதுபதி கிழச்சிங்கம் மிகவும் சிக்கலான எதிரி. ஆத்திரமோ, பரபரப்போ அடையாமல நிதானமாக நடந்து வெற்றி கொள்ள முயல்க!' என்பது போல் தாயும், இராயசம் அச்சையாவும் அந்த ஒலையில் ரங்ககிருஷ்ணனை எச்சரித்திருந்தார்கள். 'தங்கள் அறிவுரையை மதித்து அதன்படியே நடப்பேன். கவலை வேண்டாம்' என்று தாய்க்கு மறுமொழி அனுப்பிவிட்டு, மேலே பயணத்தைத் தொடர்ந்தான் ரங்ககிருஷ்ணன்.