பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

ராணி மங்கம்மாள்

ரங்ககிருஷ்ணனும் படைவீரர்களும் மறுநாள் முற்பகல் வேளையில் இராமநாதபுர எல்லையை அடைந்தபோது, புறக் கோட்டையாகிய வெளிப்பட்டணத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். மிகவும் சாதுரியமான முறையில் அந்தத் தடை செய்யப்பட்டிருந்தது. இராமநாதபுரம் அரண்மனையைச் சேர்ந்த வீரர்கள், வெயில் நேரத்துக்கு இதமான குளிர்ந்த பானகமும், வெள்ளரிப் பிஞ்சுமாக எதிர் கொண்டு ரங்ககிருஷ்ணனின் படைவீரர்களை உபசரித்தார்கள்.

கோடை வெயிலில் அலைந்து வந்த களைப்பாலும், தாகத்தாலும் ரங்ககிருஷ்ணனின் படைவீரர்களாலும் அதை ஏற்காமலிருக்க முடியவில்லை. ரங்ககிருஷ்ணனோ படைத் தலைவர்களோ அந்த உபசரணையை ஏற்கக் கூடாது என்று தங்கள் படைவீரர்களைத் தடுக்கவும் இயலாமற் போயிற்று. ரங்ககிருஷ்ணன் யோசித்துக் கொண்டிருந்தபோதே, இராமநாதபுரம் அரண்மனையைச் சேர்ந்த மந்திரி பிரதானிகள் அவனை எதிர்கொண்டு வந்து, "சேதுபதி சபையில் கொலுவீற்றிருக்கிறார் சபை நடந்து கொண்டிருக்கிறது. புலவர்களும், கலைஞர்களும் தங்கள் கவித்திறனையும், கலைத்திறனையும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பாதியில் எழுந்து வந்தால் புலவர்களையும், கவிஞர்களையும் அவமதித்ததுபோல் ஆகிவிடுமே என்று தயங்கி எங்களைக் கூப்பிட்டு உரிய ராஜ மரியாதையோடு தங்களை எதிர்கொண்டு அழைத்துவருமாறு அனுப்பினார்" என்றார்கள். அவர்கள் குரலில் பயபக்தி கனிந்திருந்தது.

அவர்கள் அழைப்பை ஏற்று உள்ளே போவதா, வேண்டாமா என்று ஓரிரு கணங்கள் தயங்கினான் ரங்ககிருஷ்ணன்.

ஒரு பெரிய விருந்தினரைச் சகல அந்தஸ்துகளுடன் வரவேற்பது போல்தான் அவனை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ஆனால் ஒரு வித்தியாசத்தை ரங்ககிருஷ்ணன் அத்தனை பரபரப்பிலும் கூர்ந்து கவனிக்கத் தவறவில்லை.

ஒரு பேரரசனை அவனுக்குக் கீழ்ப்படியும் ஒரு சிற்றரசன் வரவேற்பதுபோல் சேதுபதி தானே எதிர்கொண்டு வந்து வரவேற்