பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

65

அப்போது அந்தச் சூழலில் அதை மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் திணறினான் ரங்ககிருஷ்ணன். மறுத்தால் இராமேஸ்வரத்தை மதிக்காதவன் என்ற கெட்ட பெயர் தனக்கு ஏற்படும். ஆதரித்தால் தான் படையெடுத்து வந்திருப்பதே யாருக்கும் தெரியாது போய்விடும். சேதுபதியின் சாதுரியத்தைக் கண்டு வியப்பு மட்டுமின்றி அதிர்ச்சியும் அடைந்தான் ரங்ககிருஷ்ணன். தன்னை அரசன் என்றோ பேரரசன் என்றோ ஏற்பதை அறிவிக்கும் எந்தச் சொல்லாலும் அழைக்காமல் தந்திரமாக, சின்ன நாயக்கரே என்று மட்டும் அழைத்துச் சமாளிக்கும் சேதுபதியின் தந்திரமும் அவனுக்குப் புரியத்தான் செய்தது. 'பரராச கேசரி' என்று சேதுபதிக்குப் பட்டமளித்துப் பாராட்டிய தன் தந்தை சொக்கநாத நாயக்கரையே “பெரிய நாயக்கர்" என்றுதான் அவர் அழைப்பது வழக்கமென்று ரங்ககிருஷ்ணன் கேள்விப்பட்டிருந்தான்.

உயரமும் பருமனுமாக உயர்ந்து நின்று பிடரி மயிரோடு சிலிர்த்துக் கொண்டு நிற்கும் சிங்கம் போன்ற சேதுபதியின் பார்வையைக் கண்டு என்ன சொல்லிச் சமாளிப்பதென்று புரியாமல் தயங்கினான் ரங்ககிருஷ்ணன். அதற்குள் அவனை அமரச் செய்தார் சேதுபதி.

"எங்கே? நம்முடைய புகழ்பெற்ற சேதுநாட்டு அவைப் புலவர்கள்? சின்ன நாயக்கரின் இராமேஸ்வர யாத்திரையைப் புகழ்ந்து பாடுங்கள் பார்க்கலாம்."

என்று கிழவன் சேதுபதி அதற்குள் முந்திக்கொண்டு சேதுநாட்டுத் தமிழ்ப்புலவர்களை அழைத்து ரங்ககிருஷ்ணனை மேலும் திணற அடித்தார்.

புலவர்களில் முதன்மையான ஒருவர் அவையில் முன்வந்து சேதுபதியையும், ரங்ககிருஷ்ணனையும் வணங்கி விட்டுப் பாடத் தொடங்கினார்.

"கத்துகடல்சூழும்
ராமேசர்க் காண்பதற்காய்
எத்தனையோகாதம் வழிநடந்த-பத்திமிகு
சத்புருடன் நாயக்க சாம்ராஜ்ய மாமன்னன்
முத்துவீ ரப்பன் முகம்"

ரா-5