பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

ராணி மங்கம்மாள்

பாட்டிலும் ரங்ககிருஷ்ணன் ராமேஸ்வர தரிசனத்துக்காகவே பல காததூரம் வழிநடந்துவந்திருப்பதாகவே பாடியிருந்தார் புலவர்.

ரங்ககிருஷ்ணனுக்கு அருகே அமர்ந்திருந்த அவனுடைய சொந்தத் தளபதிகளில் ஒருவர் சற்றே அதிகமான தமிழ் ஞானமுடையவர். அவர் இந்த வெண்பாவைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்துவிட்டு மெல்லத் திரும்பி ரங்ககிருஷ்ணனின் காதருகே குனிந்து, "பாட்டில் மோசம் இருக்கிறது அரசே மேலோட்டமாக உங்களைப் புகழ்வதுபோல் பாடப்பட்டிருந்தாலும் உள்ளே பயங்கரமாகப் பொடி வைக்கப்பட்டிருக்கிறது" என்றார். ரங்க கிருஷ்ணன் அதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தான். அந்தப் பாடலில் அப்படி என்ன பொடி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அங்கேயே அரசவையில் விரிவாகக் கேட்டறிய முடியாமல் இருந்தது. சூழ்நிலை அதற்கு இசைவாக இல்லை. சேதுபதியின் சாதுரியங்களும், சாமர்த்தியங்களும் வேறு ரங்ககிருஷ்ணனை அயர்ந்துபோகச் செய்திருந்தன. சபையில் மேலும் பல புலவர்கள் ரங்ககிருஷ்ணனை வாழ்த்தினர். வரவேற்பும், வாழ்த்தும் பிரமாதமாகத்தான் இருந்தன. ஓரிரு கணங்கள் அந்தச் சீமையின் மேல் படையெடுத்து வந்திருக்கிறோம் என்பதைக்கூட ரங்க கிருஷ்ணனை மறந்துபோகச் செய்திருந்தன.

'இப்படியும் சாதுரியமாக நடிக்க முடியுமா?' என்று சேதுபதியைப் பற்றி வியந்து மலைத்துக் கொண்டிருந்த அதேசமயம் தன் படையெடுப்பு பயன்படாமல் தளர்ந்து போனதை எண்ணி ரங்ககிருஷ்ணனுக்கு வருத்தமாகவும் இருந்தது. அவனோடு வந்திருந்த படைவீரர்கள் வெளிக்கோட்டையில் சேதுநாட்டு விருந்துபசாரத்தை ஏற்று மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் இருந்தார்கள். அவனைத் தனியே பிரித்து அழைத்து வந்து உற்சாகமான புகழ் வார்த்தைகளால் சிறைப்படுத்த முயல்வது போலிருந்தது சேதுபதியின் செய்கை.

ஓர் எதிரியை மெய்யான சிறைச்சாலையில் அடைப்பதைக்கூடப் புரிந்துகொண்டு விடலாம். புகழ் வார்த்தைகள் என்ற சிறைச் சாலையைப் பின்னி அதிலடைப்பது மிகவும் அபாயகரமானது.