பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ராணி மங்கம்மாள்

1. சித்திரா பெளர்ணமியன்று கிடைத்த செய்தி

துரை மாநகரம் கோலாகலமாக விழாக் கோலம் பூண்டிருந்தது. பார்க்கும் இடமெல்லாம் புதுமையும், பொலிவும், திருவிழாக் கலகலப்பும் தென்பட்டன. வேனிற் காலத்தில் இளந்தென்றலின் இதமான சுகானுபவம் தன் பொன்மேனிக்குக் கிடைக்க வேணும் என மார்புக் கச்சுக்கு மேல் நிறை ஆடைகள் அணியாமல் தோளில் ஓர் ஓரமாக அலங்கார மேலாடைச் சரியவிட்டுக் கொண்டு மஞ்சத்தில் துவண்டு கிடக்கும் இளமங்கை போல் மணல் திட்டுக்களுக்கிடையே ஓர் ஓரமாகச் சிறிதளவே நீர் பாயும் இளைத்த எழில் நதியாக வையை இலங்கிக் கொண்டிருந்தாள். ஆம்! அது தான் அவளுடைய வேனிற் காலத்து விழாக்கோலம். அவளது பொன்னிற மணல் மேனியில் பந்தல்களும், தோரணங்களும் தென்பட்டன. பெரும் புலவர்களும், பேரறிஞர்களும், மக்களும் கூடிச் சிந்திக்கும் முதன்மையும் அருமையும் இருப்பதால்தானே இந்த நகரத்திற்குக் கூடல் என்றே ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள்! உலகத்தை முழுவதையும் பெயர்த்துக் கொண்டு வந்து ஒரு தராசுத் தட்டில் வைத்து மற்றொரு தராசுத் தட்டில் மதுரை மாநகரத்தை மட்டும் வைத்தால் கூட இதன் மதிப்புதான் அதிகமாக இருக்கும் என்றெல்லாம் புலவர்கள் புகழ்ந்தது பொருத்தம் என்றே தோன்றியது.