பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

ராணி மங்கம்மாள்

"மிகவும் வேண்டியவர்களுக்கு வேண்டியவர்களைக் கொன்று விடுவதும் கூட ஒருவகை உபசரணைதானோ?"

சேதுபதி சாப்பிடுவதை நிறுத்திவிட்டுக் கலத்திலிருந்த பார்வையை நிமிர்த்தி அவனைப் பார்த்தார்.

"சுவையான இனிய உணவை அருந்தியபடி கசப்பான விஷயங்களைப் பேசுகிறீர்கள் சின்ன நாயக்கரே"

"கசப்பும் அறுசுவைகளில் ஒன்றுதானே?"

"இருக்கலாம். ஆனால் எல்லா நேரத்திலும் அது உவப்பதில்லை. விருந்தினரைக் கசப்புக்கு உள்ளாக்குவது இந்த அரண்மனையில் வழக்கமில்லை."

குமாரப்ப பிள்ளை என்று தான் தொடங்கிய வாக்கியத்தை ரங்ககிருஷ்ணன் முடிப்பதற்குள்ளேயே சேதுபதி குறுக்கிட்டு,

"நல்ல மனிதராயிருந்தார். படிப்பாளியாயிருந்தார். ஆனால் அவருடைய விசுவாசமெல்லாம் புறப்பட்ட இடமாகிய சொக்கநாத நாயக்கரின் வம்சத்தில் தான் குவிந்திருந்ததே தவிர, வந்து சேர்ந்த இடமாகிய சேது நாட்டின் மேல் எள்ளளவும் இல்லை" என்றார்.

"உண்மையாக ஒரு தரப்புக்கு மட்டும் விசுவாசமாகயிருப்பது பாவம் என்று விசுவாசத்துக்கு புது விளக்கம் இப்போதுதான் புரிகிறது. எல்லாருக்கும் விசுவாசமாயிருப்பது இங்கிதமேயன்றி விசுவாசமாகாது."

"சின்னநாயக்கர் சன்மார்க்க பாஷையில் விசுவாசத்தைப்பற்றி விளக்குகிறார் போலிருக்கிறது எனக்கு அரசியல் நிகண்டின்படிதான் அதற்கு அர்த்தம் தெரியும் சின்ன நாயக்கரே!"

"சேது நாட்டில் சன்மார்க்கத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லாதபடிதான் ஆட்சியும் அரசும் நடக்குமென்று இதுவரை புரிந்துகொள்ளாதது என் தவறென்று இப்போது தான் தெரிகிறது."

"சன்மார்க்கத்தைப் பற்றிச் சின்ன நாயக்கரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய அளவு தமிழ்ப் புலமைக்குப்