நா. பார்த்தசாரதி
73
அப்போது வாதத்தில் தன் பக்கம் தான் மெல்ல வலுவிழந்து போய்க் கொண்டிருக்கிறோம் என்பது ரங்ககிருஷ்ணனுக்கே நன்றாகப் புரிந்தது.
Page வார்ப்புரு:Largeinitial/styles.css has no content.இரகுநாத சேதுபதியின் அந்த வார்த்தை வித்தகம் ரங்ககிருஷ்ணனை மெல்ல மெல்லத் தளரச் செய்திருந்தது. பேச்சிலேயே எதிரியை வீழ்ச்சியடையச் செய்யும் அந்தக் கிழச் சிங்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினான் அவன். போரிலும் வெல்ல முடியாமல், பேச்சிலும் வெல்ல முடியாமல் சேதுபதியிடம் சிக்கித் திகைத்துக் கொண்டிருந்தான் ரங்ககிருஷ்ணன். சிக்கல்கள் இப்போது மேலும் சிக்கலாகியிருந்தன.
ஆத்திரத்தோடு படையெடுத்து வந்த தன்னை விருந்தினனாக்கி இராமேஸ்வரத்துக்குத் தீர்த்த யாத்திரை வந்தவன்போல மாற்றிக் காட்டி நாடகமாடிய அந்தச் சாமர்த்தியம் அவனை மருட்டியது. திகைத்து மிரளச் செய்தது.
மறுநாள் வைகறையில் ரங்ககிருஷ்ணனின் ராமேஸ்வர யாத்திரைக்கு ஏற்பாடு செய்யத் தொடங்கியிருந்தார் சேதுபதி. அவனாலேயே அதைத் தடுக்க முடியவில்லை; ராமேஸ்வர தரிசனத்தைப் புறக்கணிக்கவும் முடியவில்லை.
சேதுபதியின் விருந்துபசாரம் முடிந்ததும் உடன் வந்திருந்த படைத்தலைவர்களும் ரங்ககிருஷ்ணனும் மறுபடி சந்தித்துக்கொள்ள முடிந்தது. இரவில் அவர்கள் தங்கிய விருந்தினர் மாளிகையில் ஓரளவு தனிமையில் உரையாட வாய்ப்புக் கிடைத்தது.
அதுவரை தன் மனத்தில் ஆவலோடு அடக்கிக் கொண்டிருந்த ஒரு சந்தேகத்தை அப்போதுதான் ரங்ககிருஷ்ணன் தன்னுடன் வந்திருந்த படைத்தலைவர்களில் ஒருவனிடம் கேட்டான்.