பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

ராணி மங்கம்மாள்

"என்னைப் புகழ்ந்து சேதுபதியின் சபையில் பாடப்பட்ட அந்தப் பாட்டில் ஏதோ மோசம் இருப்பதாகச் சொன்னாயே அது என்ன?"

"சொல்கிறேன் அரசே! மேலோட்டமாகப் பார்த்தால் அப்படி எதுவும் மோசம் இருப்பதுபோல் புரியாது. ஆனால் தமிழ் யாப்பு இலக்கண மரபு புரிந்தவர்களால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்."

"எங்கே? எனக்குப் புரியும்படியாக அதை விளக்கிச் சொல். பார்க்கலாம்!"

"வெண்பாவில் வகையுளி என்று ஒன்று உண்டு நல்லெண்ணத்தோடு வாழ்த்திப் பாடுகிற பாடல்களில் அந்த வாழ்த்துக்கு உரியவரின் பெயரில் வகையுளி செய்து இரண்டு பிரிவாகப் பெயரைப் பிளக்கக்கூடாது."

"பெயரைப் பிளந்தால்?"

"அப்படிப் பிளப்பது மிகவும் அமங்கலமானது. மரபும் ஆகாது. முத்து வீரப்பர் என்ற தங்கள் பெயரைப்பிளந்து வகையுளி செய்து வாழ்த்தியிருக்கிறார்கள்."

"புரிகிறது சந்தேகப்பட வேண்டிய காரியந்தான்" என்றான் ரங்ககிருஷ்ணன். மேலும் சில நாட்கள் இராமநாதபுரத்தில் சேதுபதியின் விருந்தினனாகத் தங்கிய பின்னர் இராமேசுவர யாத்திரையையும் நிறைவு செய்துவிட்டு முறைப்படி திரும்பு காலையில் மீண்டும் இராமநாதபுரம் வந்தபோது திரிசிரபுரத்திலிருந்து தூதன் வந்து காத்திருந்தான். வந்த தூதனிடம் இருந்து ரங்ககிருஷ்ணனுக்குப் பல விவரங்கள் தெரிந்தன.

தான் படைகளோடு புகுந்தபோது மறவர் சீமையிலிருந்த சூழ்நிலையை விவரித்துத் தாய்க்கு ரங்ககிருஷணன் ஏற்கெனவே அனுப்பியிருந்த தகவல்களுக்கு அவளிடமிருந்து மறுமொழி இப்போது கிடைத்திருந்தது. "நிலைமையை மேலும் சிக்கலாக்க முயல வேண்டாம். போரிட ஏற்ற நிலைமையில்லாவிட்டால்