உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

77

அதைத் தன் செவிகளாலேயே ரங்ககிருஷ்ணன் கேட்க நேர்ந்திருந்தது. அதைக் கேட்டுக் கையாலாகாத வீண் கோபப்படுவதைத் தவிர அவன் வேறெதுவும் செய்ய முடியவில்லை.

மானாமதுரைக்கு அருகே நள்ளிரவில் ஒரு தெருக்கூத்து நாடகத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று ஒட்டுக்கேட்டு இதை அவன் அறிய முடிந்திருந்தது.

அது இராமாயணத் தெருக் கூத்து. பல நாட்களாக அவ்வூரில் தொடர்ந்து நடந்து வந்த அந்தத் தெருக்கூத்தில் அன்று அசோகவனத்தில் திரிசடை முதலிய அரக்கியர் புடை சூழச் சிறை வைக்கப்பட்டிருக்கும் சீதையிடம் இராவணன் வந்து கெஞ்சும் பகுதி நடந்து கொண்டிருந்தது. கனமான தோலில் சொந்தத் தலையைத் தவிர மற்ற ஒன்பது தலைகளையும் எழுதிக் கட்டிக்கொண்டு இராவணன் சீதையிடம் அட்டகாசமாகச் சிரித்துப் பேசித் தன் வீரதீரப் பிரதாபங்களை அளந்தான். நடுநடுவே நாடகத்தின் சூத்திரதாரி குறுக்கிட்டு மறவர் நாட்டை ஆளும் சேதுபதியின் பெருமைகளைச் சொன்னான். அப்படிக் கூறும் ஒரு சந்தர்ப்பத்தில்தான் 'ரங்க கிருஷ்ணன் படையெடுத்து வந்து தோற்றுத் திரும்பிக் கொண்டிருப்பதாக' ஒரு செய்தியும் தோற்பாவைக் கூத்தின் நடுவே கூறப்பட்டது.வேறு சில ஊர்களிலும் இதே தகவலை ரங்ககிருஷ்ணன் தன் செவிகளாலேயே கேள்விப்பட்டான். மிகவும் வேண்டிய படைத் தலைவர்களும் அறிந்து கொண்டு வந்து இதைத் தெரிவித்தனர்.

நாட்டின் தெருக்கூத்துகள், நாடகங்கள் மூலமாகக் கூட ஓர் அரசியல் தகவலை மக்கள் நம்பும்படியாகப் பரப்பும் சேதுபதியின் தந்திரம் அவனுக்குப் புரிந்தது. அதே சமயம் தெருக்கூத்து மூலமாகப் பரப்பப்படும் ஒன்றை அதிகாரப்பூர்வமான தகவலாகத் தான் கிளப்பிப் பிரச்னையாக்கவும் முடியாது.

'சிக்கல் நிறைந்த எதிரி' என்ற மிகமிகப் பொருத்தமான வார்த்தையால் சேதுபதியை வர்ணித்த இராயசம் அச்சையாவின் சொற்கள் அட்சர லட்சம் பெறக் கூடியவை என்பதை இப்போது