பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

ராணி மங்கம்மாள்

ரங்ககிருஷ்ணன் பரிபூரணமாக உணர்ந்து அந்த மதியூகி, சேதுபதியை மிகமிகச் சரியான முறையில் எடைபோட்டு நிறுத்திருப்பதைத் தன் மனத்திற்குள் பாராட்டிக்கொண்டான். பாம்பென்று அடிக்கவும் முடியாமல் பழுதை என்று தாண்டவும் முடியாமல் அவனைத் திணற அடித்தார் சேதுபதி.

ஒரு திங்கள் காலம், படையெடுத்து இராமநாதபுரம் சென்றதிலும் படைகளை வழி நடத்திக்கொண்டு மறுபடி திரிசிரபுரம் திரும்பியதிலுமே கழிந்து விட்டது. ரங்க கிருஷ்ணனின் பயன்தராத இந்தப் படையெடுப்பைப்பற்றித் தாய் மங்கம்மாளோ, இராயசம் அச்சையாவோ அவனிடம் சிறிதும் வருத்தப்படவில்லை என்றாலும் அவன் சற்றே மனம் தளர்ந்து போயிருந்தான்.

அவன் மனைவி சின்னமுத்தம்மாள் மட்டும் படையெடுப்பின் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவன் திரும்பி வந்து தன் எதிரே முகமலர்ச்சியோடு ஆருயிர்க் கணவனாக அன்பு செலுத்தியதையே ஒரு வெற்றியாகக் கருதினாள். ரங்ககிருஷ்ணன் அவளைக் கேட்டான்.

"வெற்றிவாகை சூடிவராத நிலையில்கூட இவ்வளவு பிரியமாக வரவேற்கிறாயே? இன்னும் நான் வெற்றியோடு வந்திருந்தால் எப்படிச் சிறப்பான வரவேற்பு இருக்குமோ?"

"எனக்கு உங்களைவிட எதுவும் முக்கியமில்லை. நீங்கள் தான் என் வெற்றி நீண்ட பிரிவுக்குப் பின் மறுபடி உங்களைச் சந்திப்பதே என் வெற்றிதான்"

"அரசர்களின் பட்டத்தரசிகள் அவர்களின் பிற வெற்றி தோல்விகளைப் பற்றியும் கவலைப்படத்தான் வேண்டும்."

"என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் அரசர் என்பதை விட என் ஆருயிர்க் காதலர் கணவர் என்பது தான் முக்கியம்" என்று பதில் கூறியபடி ரங்க்கிருஷ்ணனின் கழுத்தில் மணம் கமழும் மல்லிகை மாலையை அணிவித்துத் தோள்களில் சந்தனக் குழம்பைப் பூசினாள் சின்ன முத்தம்மாள். ஆறுதலாக அவன் கால்களை நீவிவிட்டாள்.