பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

ராணி மங்கம்மாள்

நற்பண்பைப் போக்கிவிடும்" என்றார். உடனே தன் தாயை நோக்கி, "எப்போது எதில் நான் விருப்பு வெறுப்புகளோடு செயல்பட்டிருக்கிறேன் என்று நீங்கள் என் குறையைச் சுட்டிக்காட்டினால் நான் என்னைத் திருத்திக்கொள்ள வசதியாயிருக்கும் அம்மா!" என்றான் ரங்ககிருஷ்ணன்.

"நீ இதுவரை அப்படி எதுவும் செய்துவிட்டாய் என்று நாங்கள் சொல்ல வரவில்லை மகனே! இப்போது ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது. அதில் நீ எப்படித் தீர்வு காண்கிறாய் என்பதை வைத்தே உன்னைப் புரிந்து கொள்ள முடியும்."

"சொல்லுங்கள் அம்மா" அவன் இப்படிக் கூறியதும் சற்றுத் தொலைவில் நின்ற அரண்மனைச் சேவகன் ஒருவனைக் கைதட்டி அருகே அழைத்து.

"நீ போய் வெளியே காத்திருக்கும் அந்தக் கிறிஸ்தவப் பாதிரியாரை இங்கே அழைத்து வா அப்பா" என்றாள் ராணி மங்கம்மாள்.

சேவகன் சென்று உயர்ந்த தோற்றமுடைய வெள்ளை அங்கியணிந்த பாதிரியார் ஒருவரை மிகவும் மரியாதையாக உடன் அழைத்து வந்தான். அவரை வரவேற்று அமரச் செய்துவிட்டு, "ரங்ககிருஷ்ணா இவருடைய குறை என்னவென விசாரித்து உடனே அதைத் தீர்த்து வைப்பது உன் பொறுப்பு" என்று அவனிடம் தெரிவித்தபின் தாயும், இராயசம் அச்சையாவும் அங்கிருந்து பாதிரியாரிடமும் அவனிடமும் விடை பெற்றுக் கொண்டு வெளியேறி விட்டார்கள்.

ரங்ககிருஷ்ணன் அந்தக் கிறிஸ்தவப் பாதிரியாரைக் கூர்ந்து கவனித்தான். அலைந்து திரிந்து களைத்த சோர்வு அவர் முகத்தில் தெரிந்தது. அவரது தூய வெள்ளை அங்கிகூட இரண்டோர் இடங்களில் கிழிந்திருந்தது. அழுக்கும் அடைந்திருந்தது. அவருடைய கண்களில் கலக்கமும் பயமும் பதற்றமும் தெரிந்தன.