பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. சகலருக்கும் சமநீதி

பாதிரியாரை மிகவும் மரியாதையாக வணங்கி வரவேற்றான் ரங்க கிருஷ்ணன். அதிகச் சிரமப்பட்டு அலைந்து திரிந்து வந்திருப்பதுபோல் களைப்போடும் கவலையோடும் தென்பட்ட அந்தப் பாதிரியாரைப் பரிவோடும் அனுதாபத்தோடும் விசாரித்தான் அவன்;

"பெரியவரே நாடு எங்கும் நன்கு வாழக் கேடு ஒன்றும் இல்லை என்பதுதான் எமது கொள்கை. எல்லாச் சமயங்களும் எல்லா வாழ்க்கை நெறிகளும் செழிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடுதான் எங்கள் பாட்டனார் திருமலை நாயக்கர் கால முதல் இந்த நாயக்கர் மரபின் நல்லாட்சி இங்கு தொடர்ந்து நடந்து வருகிறது."

"அந்த நல்லெண்ணத்தை நாங்களும் அறிவோம் அரசே! நோக்கம் நன்றாகவே இருந்தாலும் கவனக் குறைவால் சில செயல்கள் பழுதுபட்டுப் போகலாம்."

"செயல் எங்காவது பழுதுபட்டுப் போயிருந்தால் அதை உடனே எங்கள் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டியது தங்களைப் போன்ற சான்றோர்களின் கடமை அல்லவா?"

"தாங்கள் கூறும் கடமையைக் கருதியே இப்போது தங்களைக் காண வந்திருக்கிறேன் அரசே!"

புதிதாகத் தமிழ் கற்று அதைக் கற்ற சுவட்டோடு உடனே பேசும் கொச்சையும் திருத்தமும் மாறி மாறி விரவிய தமிழ் நடையில் பேசினார் பாதிரியார். வடிவில் முழுமையும் எழுத்தொலி உச்சரிப்பில் கொச்சையுமாக அது இருந்தது. ஆயினும் அவர்

தேவையை உணர்ந்து தமிழ் கற்றிருக்கும் விரைவையும் விவேகத்தையும் மனத்துக்குள்ளேயே பாராட்டிக்கொண்டான் ரங்ககிருஷ்ணன். எந்தப் பிரதேசத்துக்குப் போகிறோமோ அந்தப் பிரதேசத்து மொழியைக் கற்காமல் அப்பகுதி மக்களின் நம்பிக்

ரா-6