பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

ராணி மங்கம்மாள்

உறுதி மொழிகள் கூறி ஆவன செய்வதாக வாக்களித்து அவரை அனுப்பி வைத்துவிட்டு உடனே மாறுவேடத்தில் அந்தக் கிறிஸ்தவர்களின் நிலங்களாக அவர் குறிப்பிட்டிருந்த பகுதிக்குச் சென்றான் ரங்ககிருஷ்ணன்.

தன் பாட்டனார் திருமலை நாயக்கரும் தந்தை சொக்கநாத நாயக்கரும், தாய் ராணி மங்கம்மாளும் சமயக் காழ்ப்புகளையும், மதமாற்சரியங்களையும், பூசல்களையும் தவிர்க்க எவ்வளவோ பாடுபட்டிருந்தும் அத்தகைய சண்டைகளும், பூசல்களும் மறுபடி எழுவதைத் தவிர்க்க முடியாமல் இருப்பதை இப்போது அவனே உணர்ந்தான்.

பெரும்பாலும் தவறுகள் ஒரு தரப்பில் மட்டுமில்லை. இரு தரப்பிலும் இருந்தன. இவர்கள் அடங்கினால் அவர்கள் பூசல்களைக் கிளப்புவதும் அவர்கள் அடங்கினால் இவர்கள் பூசல்களைக் கிளப்புவதும் வழக்கமாகி இருந்தது. தெய்வங்களுக்கே பொறுக்காததும் பிடிக்காததுமாகிய சண்டை சச்சரவுகளைத் தெய்வங்களின் பெயரால் தெய்வங்களுக்காகச் செய்வதாகக் கருதி மனிதர்கள் செய்தார்கள். பரந்த மனப்பான்மையும் சமரச நினைவுகளும் வருவது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது.

மனவேதனையுடன் அந்த இடங்களைச் சுற்றிப் பார்த்தபோது அங்கே புதிய புதிய கோயில்களைச் சுற்றிலும் அவற்றைச் சார்ந்து மக்கள் குடியேறியிருப்பதையும் ரங்ககிருஷ்ணனால் காணமுடிந்தது. கோயில்களில் தெய்வத்திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆகம முறைப்படி பூஜைகளும் வழிபாடுகளும் நடந்து கொண்டிருந்தன.

உண்மை நிலைமையை அறிவதற்காக அங்கேயிருந்த பரமபக்தர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான் அவன்.

"ஐயா பரம பக்தரே! நான் நீண்டகாலம் வடதேசங்களில் தீர்த்த யாத்திரை போய்விட்டு இப்போதுதான் மீண்டும் திரிசிரபுரம் திரும்பினேன். முன்பு நான் இந்த இடத்தில் கோயில்களைக் கண்டதில்லை. இப்போது காண்கிறேன். மக்களின் பக்தி உணர்வைப்