பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 8ே இராமன் - பன்முக நோக்கில் ஏற்றுக்கொண்டதாகவே தெரியவில்லை. இங்கேயும் மாய வடிவிலும் பிறகு குரங்கு வடிவிலும் வருகின்ற அனுமன் புதியவன்தானே? எனவே, எளிதாக அவனையும் இலக்குவன் நம்பத் தயாராக இல்லை. மூல இராமன் இங்கு மட்டுமே மானைக் கண்ட பொழுது, இராகவன் பேசிய பேச்சுக்களில் புறத்தே தசரதராமனும், அகத்தே மூல இராமனும் இருப்பதை நுண்மையாகக் கவனிப்பவருக்கு விளங்குமாறு படைக்கிறான் கம்பன். இதன் பிறகு ஏறத்தாழக் காப்பியம் முழுவதிலும் மூல இராமன் வெளிப்பட்டுப் பேசும் இடமே இல்லை எனலாம். அதிரும் இராமன் - அயோத்தி இராமன் தன்னைத் தேடி வந்த இலக்குவனைக் கண்டதும் அதிர்ந்து விடுகிறான் இராமன். நடுக்காட்டில் ஒரு பெண்ணைத் தனியே விட்டு, அவள் காவலைப் போக்கிக் கொண்டதையும் நினைக்க நினைக்க அவனுடைய அச்சம், துயரம், சினம் ஆகியவை மாறிமாறி அவனை ஆட்கொள்கின்றன. தம்பி தன்னைத் தேடி வருவான் என்று கனவிலும் எதிர்பாராத சமயம் அவனைக் கண்டவுடன் அதிர்ச்சிக்குள்ளானதில் வியப்பொன்றுமில்லை. இதே இலக்குவன்தான் இந்த மான் அரக்கர் சூழ்ச்சி ஆகும்; இதன் பின்னே யாருளர் என்று தெரியாமல் தலையிட வேண்டாம்' என்று கூறினான். அப்படிப்பட்டவன் பிராட்டியைத் தனியே விட்டு விட்டு எப்படி வந்தான் என்ற வினாவும் அதற்கு உடனடியாக விடை தெரிய வேண்டும் என்ற ஆதங்கமும் மனத்தைக் குடைய, இப்பொழுது இராகவன் பேசுகிறான். மனத்தைக் குடையும் நிலையில் இராகவன் மனத்தில் தோன்றிய எண்ணப் போராட்டங்களைக் கவிஞன் ஒரே பாடலில் அற்புதமாக விளக்குகிறான்.