பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 38 இராமன் - பன்முக நோக்கில் இதனை ஆழ்ந்து சிந்தித்தால், இராமன் பண்பிற்கு ஒத்துவராத இந்தச் செயலை அவன் செய்யுமாறு தன் சொல் திறமையால் விளக்கியவன் அனுமனே ஆவான் என்பது புலப்படுகிறது. அவ்வளவு விரிவாக வாலியின் ஆற்றல், சிவபூசை என்பவற்றை விளக்கமாகக் கூறிவிட்டு எதிரில் வந்தவர்கள் வன்மையில் பாதி எடுத்துக் கொள்வான் என்று சொல்லியதாலேயே இராமன் வேறுநின்று ஏவிடத்துணிந்தது என்ற முடிவுக்கு வந்தான். வாலியை மறைந்து நின்றுதான் கொல்லுதல் வேண்டும் என்று அனுமன் கூறவில்லை. அதுதவிர வேறு வழி இல்லை என்றும் வெளிப்படையாகக் கூறவில்லை. இராமனே அந்த முடிவுக்கு வருகிறான்; அறிவிக்கவும் செய்கிறான். சொல்லாமல் சொல்லிச் செய்விக்க வல்லது அனுமனின் சொல்வன்மை. சொல்லின் செல்வனின் இந்தப் பெருவெற்றியைக் கம்பன் இந்த இடத்தில் சொல்லவில்லை. சொல்லாற்றல்மட்டு மன்றி அனுமனிடம் செறிந்துகிடந்த பல்வேறு ஆற்றல்களையும் அவனுக்கே புலப்படுத்திக் கடலைத் தாவிடத் துரண்டும் இடத்தில் சாம்பன் கூற்றாகப் பின்னே கூறுகிறான், கவிச்சக்கரவர்த்தி: அறிந்து, திறத்து ஆறு எண்ணி, அறத்து ஆறு அழியாமை மறித்து உருள, போர் வாலியை வெல்லும் மதி வல்லிர். - கம்ப 4723 வாலிவதை இராமனின் வெற்றி என்றால், அந்த வெற்றி வாய்க்கச் செய்தவன் அனுமனே என்பது கவிச்சக்கரவர்த்தியின் முடிவு. (அதனை வாலிவதை சூழலில் சொல்லாமல் மிகவும் பின்னே தள்ளிக் கம்பன் கூறியது ஏன் என்பது தனி ஆய்வுக்கு உரியது. இங்கே அதனை விரிப்பது மற்றொன்று விரித்தலாகிவிடும்)