பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ேே இராமன் - பன்முக நோக்கில் இந்நாட்டில் வழங்கியது என்று நினைய வேண்டியுள்ளது. கடந்த ஞான்றை (கடந்தபொழுது), பச்சை - (கேடயம்); தண்டை (படைவகுப்பு, எயில்புறத்திறுத்தல் (கோட்டையை வளைத்து நிற்றல்) - முதலிய சொல்லாட்சிகள் சிலப்பதிகார காலத்துக்கும் முற்பட்டவையோ என்றுகூட ஒருவாறு நினையவேண்டியுள்ளது. உதாரணமாகக் காட்டப்பெற்ற இரண்டு பகுதிகளும் ஒரே நூலின் பகுதிகள் என்பதையும் ஊகிக்க முடிகிறது என்றால் இராம காதை, வெண்பாவும் ஆசிரியமும் பெருகி வளர்ந்திருந்த காலத்தில் ஒரு முழு நூலாகவே இத் தமிழ் நாட்டில் வழங்கியிருக்க வேண்டும். அத்தகைய நூல் இன்று கிடையாமல் போனது பெரிதும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இந்த நூலை இயற்றியவர் வான்மீகத்தைப் பயின்று அதன்வழித் தம் நூலை இயற்றினாரா என்றும் அறிய முடியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் உறுதி. வான்மீகத்தை இவர் அறிந்திருந்தாலும், அறியாமல் இத்தமிழ் நாட்டில் வழங்கிய செவிவழிக் கதையை மூலமாக வைத்துக்கொண்டு தம்நூலை ஆக்கியிருந்தாலும், ஒன்றைக் கடைப்பிடித்தார் என்பதை அறியமுடிகிறது. மதியுடம்பட்ட மடக் கண் சீதை' என்று பாடினார் என்றால், வடநாட்டுக் கதையைத் தமிழ்மரபு கெடாதபடி பாடினார் என்பது உறுதியாகிறது. சிலப்பதிகாரத்தின் பின்னர், ஒன்று அல்லது இரண்டு நூற்றாண்டுகள் கழித்துத் தோன்றிய மணிமேகலையிலும் இராமகாதையின் நிகழ்ச்சி ஒன்று பேசப்படுகிறது. காய சண்டிகை என்னும் பெண், யானைத்தி என்னும் நோயால் பீடிக்கப்பெற்றாள். எவ்வளவு உண்டாலும் அவள் பசி அடங்குவதில்லையாம். வாய்வழிச் சென்ற உணவு அவள் பசியை அடக்காமல் மறைந்த புதுமைக்கு உவமை கூறும் முறையில், இராமன் சேதுவில் அணை கட்டியபொழுது குரங்குகள் எடுத்து எறிந்த கற்கள் கடலினுள் சென்று மறைந்துவிட்டதைக் கூறுகிறாள்.