பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரம்பொருளும் இராமனும் ே 403 சமயப் பூசலில் தன்னை இழந்துநின்ற நிலைதான் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். அரசியலைப் பொறுத்தமட்டில் பல்லவர் ஆட்சி மறைந்து, சோழப் பேரரசு அப்பொழுதுதான் கால்கொள்ளத் தொடங்கியது. அரசியல் நிலைமை வலுவாக இல்லை. தமிழர்களின் பக்தி இயக்கம் அமிழ்த்தப்பட்டு விட்டது. ஒருவரை ஒருவர் எள்ளிநகையாடி, "என் சமயம் பெரிது, உன் சமயம் சிறிது என்று சமயப் பூசல் தலை விரித்தாடிய காலம் ஒன்பதாம் நூற்றாண்டாகும். அத்தகைய காலத்தில் தோன்றியவன் கம்பநாடன். அவனுடைய மனத்தில் பின் கண்ட முறையில் எண்ணங்கள் உருவாகி இருக்க வேண்டும்: இந்தச் சமயப் பூசலை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். இறைவன் ஒருவனே. அவன் பெயர்கள் பலவாய் இருப்பினும் மூலப் பரம்பொருள் ஒன்றே. அந்தப் பரம்பொருள் தன்னால் படைக்கப்பட்ட உயிர்களிடத்துப் பெருங்கருணை கொண்டு தேவை ஏற்படும் பொழுது தக்கவர்களை அனுப்பியும், அல்லது தானே மானுட வடிவில் வந்தும் உயிர்கட்கு அருள்புரிகின்றது. இந்த இரண்டு கருத்துகளையும் தமிழ் மக்களிடையே பரப்புவதற்கு மிகப் பொருத்தமான கதை என்று கம்பன் தேர்ந்தெடுத்தது இராமகாதையாகும். காப்பியத்தைத் தொடங்கியது முதல் முடிக்கும்வரை மேலே கூறிய இரண்டு கருத்துகளையும் வலியுறுத்திக்கொண்டே செல்கிறான். பரம்பொருளின் இலக்கணத்தையும் அது உலகிடை வந்து செயல்படுவதையும் விளக்கக் கவிஞன் இரண்டு வழிகளை மேற்கொள்கிறான். கடவுள் வாழ்த்தாகப் பாடியும், காப்பியத்தினுள்ளே இயன்ற இடங்களில் தன் கருத்தாக இதனை வலியுறுத்தியும் செல்வது முதல் வழி. இரண்டாவது வழி: காப்பியத்தில் வரும் பாத்திரங்கள் கூற்றாக மேலே கூறிய இரண்டையும் வலியுறுத்துவது. இந்த இரண்டு வழிகளையும் கையாண்டு கம்பன் செய்த சாதனைகளை விரிவாகக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்