உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV

பொருத்தமற்ற வாதமே. தனித்தனியே இருவர் பண்பையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். இருவரும் சந்திக்க நேர்ந்த காலத்திலும், இவர்களுடைய பண்புகள் ஒளிவிட்டு மிளிர்தலைக் காணலாம். இராமனோடு பொருது மீண்ட இராவணன், “நாசம் வந்துற்ற போதும் நல்லதோர் பகையைப் பெற்றேன்!" என்று கூறுவதால், அவன் வீரம் இராமன் வீரத்திற்குச் சிறிதும் சளைத்ததன்று என்பதை உணரமுடிகிறது. கம்பன், கருத்தும் அதுவாதல் அறியக் கிடக்கிறது.

ஆகவே, ஓர் அவலத் தலைவன் (Tragic Hero) என்றால், அவனுக்கு என்ன என்ன பண்புகள் இருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றனவோ அவை எல்லாவற்றிற்கும் ஒரு கொள்கலமாக இராவணனை ஆக்கியுள்ளான் கம்பன்; அவலத் தலைவன் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கும் பண்புகள் சிலவற்றையும் இராவணன்பால் ஏற்றியுள்ளான். இப் பண்புகள் காரணமாக இராவணன் வீழ்ச்சி நடைபெறுகிறது. அவ்வீழ்ச்சியைப் படிப்படியாகக் கூறுகிறான் கலைஞன். இதனை ஒரு கோவைப்படுத்திக் காண்டலே ஓர் அழகு.

[1]*தம்முடைய பல்வேறு அலுவல்கள் இடையேயும் இந் நூலைப் படித்து, ஒரு முன்னுரை எழுதி உதவிய பல்கலைவேந்தர் திரு. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், M.A.,M.O.L. அவர்கட்கும், அணிந்துரை உதவிய தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கட்கும் நன்றி உரியது.


  1. * இந்நூலின் முதற்பதிப்பு 1947ல் வெளிவந்த காலை.