230 * இராவணன் பாட்சியும் வீழ்ச்சியும்
பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றோ திட்டமாய்க் கூறுவதற்கில்லை. இவ்வனைவரும். ஒன்றாய்ப் பொறுப்பில் பங்கு பெறுகின்றனர், இராவணன் இறந்ததற்காக நாம் வருந்துவதில் பயனில்லை; ஏனெனில், அவன் தானாகவோ அல்லது பிறர் யோசனையாலோ செய்த தீமைகளே அவன் அழிவுக்குக் காரணமாயிருந்தன. ஆனால், அவனோடு அளவிட முடியாத நற்பண்புகள் பலவும் அழிந்தொழிந்தமையாலேதான் நாம் தாங்கொணாத துன்பத்தையடைகிறோம். இந் தற்பண்புகள் எல்லாம் இராவணன் முயன்று பெற்றவை; தேவர்களாலும் முதல்வர்களாலும் விரும்பிக் கொடுக்கப்பெற்றவை; இவற்றை நன்மையைப் பயக்க இராவணன் பயன்படுத்தியவரை, அவன் இன்பமாய் இருந்தான். இவற்றால் பிறர்க்குத் துன்பத்தைத் தேட அவன் சூழ்ந்த பின், நன்மை தீமையைத் தோற்றுவிப்பது இயற்கை நெறிக்கு மாறுபடுமாகையால், அவன் தோற்றுவித்த தீமைகளே அவனை அழித்துவிட்டன. ஆனால், அழிவெய்துவதற்கு முன், இராவணன், தான் பல நற்பண்புகளைப் பெற்றிருந்ததையும், அவற்றை நல்ல நெறியிலே பயன்படுத்தாததே தன் அழிவுக்குக் காரணம் என்பதையும் நன்குணர்ந்தான். ஆகவேதான், 'அவன் இறக்காமலிருந்திருந்தால், அவனால் உலகம் நன்மை எய்தியிருக்குமே!' என்று நாம் ஏங்குகிறோம். இதையே கவிஞன், 'அவன் இறந்தும் இறவாதவனே' எனக் கூறுவதால் வற்புறுத்துகிறான்.
முற்றிற்று.