சிறப்புரை (தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்கள்) எல்லாவற்றிற்கும் அடிப்படையாய் ஒரு சத்தி நிற்கிறது! அச் சத்தி வற்றாதது; எல்லையற்றது. அதன் முதல் எங்கேயோ, முடிவு எங்கேயோ! அதற்கு உலகம் வழங்கிய பெயர்கள் பலப்பல. - அப் பெரும் சத்தி, காலத் தேவைக்கு ஏற்றவாறு, தன் மாட்டு அமைந்துள்ள வற்றாக் கருவினின்றும் சிற்சில கூறுகளை வெளியிடுதல் மரபு. அக் கூறுகள் முதல்முதல் கவிஞர் உள்ளத்தில் கனவாய்க் கருக் கொள்ளும்; பின்னே விஞ்ஞானியர் உள்ளத்தில் நினைவாய் உருக்கொண்டு பொருளாகும். இன்று கவிஞர் நெஞ்சில் கற்பனையாய் உலவும் ஒன்று, பன்னுறு ஆண்டு கடந்து, மெய்ஞ்ஞானியர் நெஞ்சில் பொருண்மையாய்த் திரளுதல் இயற்கை. கவிஞர் கற்பனைக் கனவில் என்றோ பறந்த விமானங்கள், இன்று வானத்தில் பறத்தல் கண்கூடு. விஞ்ஞான உலகிற்குத் தாயகம் காவிய உலகம் என்பதை மறத்தலாகாது. கம்பர் ஒரு பெருங்கலைஞர்; கனவும் நினைவும் பொதுளிய ஒரு தமிழ்ச் சுரங்கம்; பெரிய கற்பனைக் களஞ்சியம். இத்தகைய கம்பர் பெருமானைப் பெளராணிக ஆட்சி சிறைப்படுத்தியது! என்னே! என்னே!! சங்கம் கண்ட தமிழ் நாடே! உனக்கு ஐயோ!
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/6
Appearance