இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் 1. இலங்கையின் மாட்சி ! இராவணன் ஆட்சி செய்த நாடே அவன் பெருமைக்கும் சிறப்புக்கும் ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கியது. நாடு இத்தகைய சிறந்த நிலையிலிருந்தது என்று கூறினாலே அதனை ஆட்சி செய்த மன்னவன் நிலையும் விளங்கும் எனக் கருதிய கம்பநாடன், ஊர் தேடு படலம்' என்னுமொரு படலத்தை ஆக்குகிறான். அதன்கண் இலங்கையின் சிறப்பு ஒருவாறாக விவரிக்கப்படுகிறது. இன்று நாம் காணும் இலங்கையே மிக்க வளமுடையது. அன்று ஒரு சிறந்த மன்னனால் ஆட்சி செய்யப்பட்ட காலத்து அஃது இன்னும் சிறந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. பன்னெடுங் காவதம் அகன்றும் விரிந்தும் உள்ளது அப்பழம் பெரு நாடு. நாட்டின் இடையே திகழ்வது நகரம். உயிரினங்கள் யாவும் வாழ்வதால் அந்நகர் உலகை வாழ்விக்கும் திருமாலே போன்றது என்று ஆசிரியன் உவமை கூறுகிறான். நகரில் அமைந்துள்ள வீடுகள் செல்வச் செருக்கை வெளிக் காட்டி நிற்கின்றன. உலகம் முழுவதையும் வென்று அடிப்படுத்த நிற்கும் வெற்றி வீரன் ஒருவனுடைய நகரம் செல்வத்தில் செழித்திருந்தது என்பதில் வியப் பொன்றுமில்லை அன்றோ? வீடுகள் பொன்னினால் கட்டப் பெற்று மணிகள் அழுத்தப் பெற்றுள்ளன.
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/67
Appearance