பக்கம்:இருட்டு ராஜா.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்105


என்று அவனுக்கு நிச்சயமாகத் தோன்றியது. அவள் புருஷன் அவளுடைய ஊரில் அவமானப்பட்டதற்காக அர்த்தமற்ற கோபமும் எரிச்சலும் கசப்பும் கொண்டு, அவளைப் பழிவாங்குவது போல் செயலாற்றுவான் என்றே அவன் மனசுக்குப்பட்டது. அவளுக்காக அவன் மிகுதியும் அனுதாபப்பட்டான்.

அந்த ஊர் அம்மன் கோயிலில் திருவிழாப் பந்தல் தீப்பற்றி எரிந்து சாம்பலாகி விட்டதும், அதைத் தொடர்ந்து பெரிய கோயிலில் சிலைகளைத் திருடும் முயற்சி நடைபெற்றதும் முத்துமாலையை வெகுவாகப் பாதித்தன. இது ஊருக்கு நல்லதில்லை, எல்லாம் கேடு காலத்துக்குத்தான் என்று அவன் மனம் குழம்பித் தவித்தது. அவனுக்கு எதிலுமே பிடிப்பில்லாமல் போய், அவனுள் ஒரு வெறுமை உணர்வு கப்பிக் கொண்டது. இவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்தபோதும் தங்கராசு ஊரில் இல்லை. மனைவியை அழைத்து வருவதற்காக வெளியூர் போயிருந்தான். ஊர் திரும்பியதும் அம்மா கதையாகச் சொன்னாள். அடடா, நான் இல்லாமல் போயிட்டேனே என்று அவன் வருத்தப்பட்டான்.

அன்று ராத்திரி அவன் முத்துமாலையைச் சந்தித்தான். “துாங்கி வழிகிற இந்த ஊரிலும் பரபரப்பான சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தானிருக்குன்னு சொல்லு” என்று தமாஷ் பண்ண முயன்றான்.

ஆனால் முத்துமாலை உற்சாகமாக இல்லை. “ப்சா என்னத்துக்குத்தான் இப்படி எல்லாம் நடக்குதோ?” என்றான். அதில் விரக்தியும் வேதனையும் கலந்திருந்தன.

“நாரம்புநாதன் இனிமேல் திரிபுரத்தை கூட்டிக்கிட மாட்டான். அவன் இஷ்டம் போல் வடக்கேயே தங்கி விடுவான்னு பொம்பிளைகளெல்லாம் பேசிக்கிடுதாளாம். அம்மா சொன்னா...” என்று தங்கராசு கூறினான்.

“அந்த அயோக்கியன் அப்படியும் செய்வான், அதை நினைக்கையிலே தான் என் மனசு சங்கடப்படுது” என்று முத்துமாலை வருத்தப்பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/107&oldid=1139572" இலிருந்து மீள்விக்கப்பட்டது