பக்கம்:இருட்டு ராஜா.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114இருட்டு ராஜா

 சாலும் மூஞ்சியை கொண்டை முடிஞ்சு போட்டது போல தொங்க விட்டுக் கிட்டுத் திரிஞ்சா இந்த வீட்டிலே சீதேவி எட்டிப் பார்ப்பாளா? விடியா மூஞ்சி! ஊம். அவன் தலை எழுத்து ராசா மாதிரி இருக்கவனுக்கு இப்படி ஒரு தரித்திரம் வந்து சேர்ந்திருக்கு. எட்டு வீட்டு அக்கா ஒண்ணா வந்து குடியிருக்கிற இந்த மோறைக்கட்டையை அவனுக்குப் பிடிக்கலேன்னு சொன்னா, அதிலே என்ன குத்தம் இருக்கு” என்று பொரிந்து கொட்டினாள் மாமியார்.

அவள் ஓயாது இவ்விதம் பொரிந்து கொட்டியதால் அக்கடி பக்கத்தினர் அவளுக்கு பொரி அரிசி என்று பெயர் சூட்டியிருந்தனர் என்பது வளர்மதிக்குத் தெரிய வந்தது. ஆயினும் அதை ரசிக்கும் மன நிலையில் அவள் இல்லை.

மாமியார்க்காரியின் ராட்சச தர்பார் அதிகரித்துக் கொண்டு போயிற்றே தவிரக் குறைவதாயில்லை. மகனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்து மருமகளை பேயாய் படுத்த வேண்டும் என்று தவமிருந்து அவள் இஷ்டசித்தி பெற்றவள் போல் நடந்து கொண்டாள்.

“இப்படி என்னை ஆட்டிப்படைக்கணும்னு காத்திருந்தவள் போல் நடந்து கொள்கிறாளே! எடுத்ததுக் கெல்லாம் குறை கூறி, எப்பவும் ஏசிப்பேசி என் சந்தோஷத்தையும் குலைச்சு, தன் அமைதியையும் கெடுத்துக் கொள்கிறாளே பாவி, இதை விட மகனுக்கு என்னை பெண் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்காமலே இருந்திருக்கலாம்” என்று வளர்மதி எண்ணுவதும் இயல்பாயிற்று.

‘முப்பந்தலை இசக்கி’ என்று அந்த வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற பேய்த்தெய்வம் பற்றி வளர்மதி கேள்விப்பட்டிருந்தாள். அந்தக் கொடுரமான பிடாரியின் அவதாரம்தான் மாமியார் இசக்கி அம்மை என்று அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/116&oldid=1139800" இலிருந்து மீள்விக்கப்பட்டது