பக்கம்:இருட்டு ராஜா.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வல்லிக்கண்ணன்11
 


திடீரென்று ஒரு வீட்டின் திண்ணையிலிருந்து ஒரு குரல் வெடித்தது; “போறதானா போறதுதானேடா? ஏன் இங்கே நின்னு தொண்டைத் தண்ணி, வத்தும் படியாக் கத்திக்கிட்டு நிக்கிறே?” என்று.

எதிர்பாராத விதமாக மண்டையில் கல்லைத்துாக்கிப் போட்டது போலிருந்தது முத்துமாலைக்கு. “என்னது? ஆங், என்னதுங்கேன்” என்று கேட்டான். அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் அவனது குரல் கூடமாறியிருந்தது.

“ஒரு நீச்சல் கப்பலைப் பிடிப்பேன்—கல்கத்தா துறை முகம் பார்ப்பேன்னு சவால் விடுறமாதிரிச் சொல்றியே; அப்படியே போய்க் காட்டறதுதானே? இங்கே நின்னு காட்டுக் கூப்பாடு போடுவானேன்னு கேட்டேன்” என்ற பதில் கணிரென்று ஒலித்தது.

“ஹேங், யாருடாது இப்படி இந்த ஊரிலே? புது ஆளு போலிருக்கு” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவனாய் முத்துமாலை அந்த வீட்டின் முன்னே வந்தான்.

“யாரய்யாது சூரப்புலி! இப்படிக்கொஞ்சம் நிலாவிலே வந்து மூஞ்சியைக் காட்டேன். யாருன்னுதான் பார்க்கலாமே” என்றான்.

“இந்த ஊருக்கு முத்துமாலை எவ்வளவு பழையவனோ அவ்வளவு பழையவன்தான் நானும்! நல்லாப் பார்த்துக்கோ” என்று திண்ணையை விட்டு இறங்கிப் படியில் நின்றான் மற்றவன்.

முத்துமாலை அவனை உற்றுப்பார்த்தான். நன்றாக கவனித்தான். அட தங்கராசு! நீ வடக்கே எங்கேயோ இருக்கதாச் சொன்னாங்களே?” என்றான்.

“வடக்கே இருந்தா என்ன, தெக்கே வரப்படாதா?” என்று இடக்காகக் கேட்டான் தங்கராசு.