பக்கம்:இருட்டு ராஜா.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்131

 “சிவபுரம் முத்துமாலை. உங்க சம்பந்தகாரரு ஊரு தான்.”

“ஊம்ம்” என்று அவனை மேலும் கீழும் பார்த்தாள் அம்மாள். குமரகுருவும் கவனித்தான்.

“முருகனை தரிசிக்க வந்திகளாக்கும்?” பரிகாசம் லேசாக தொனித்தது அவன் பேச்சில்.

“உம்ம்” என்று சொல்லி நகரத் தொடங்கினாள் இசக்கி அம்மாள்.

நல்ல காரியம்தான். உங்க மாதிரி பக்தர்கள் வரப் போய்த்தான், கடவுளு கண்ணை மூடிக்கிட்டாரு. உலகத்திலே நடக்கிற அக்கிரமங்களை பார்க்க அவருக்கு மனமில்லைன்னு தோணுது. கடவுளு கண்ணை மூடிக்கிட்டு இருக்கிறதனாலே, மனுசங்க மேலும் மேலும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் செஞ்சுக்கிட்டே இருக் காங்கன்னு தோணுது...”

குமரகுரு இப்போது முறைத்தான். “என்னவே வழியை மறிச்சுக்கிட்டு உளறிக் கொட்டுதீரு? நீரு யாரு?” என்று அதட்டினான்.

முத்துமாலை குறும்புத்தனமாகச் சிரித்தான். “பரவால்லியே. உனக்கு ஆம்பிளை மாதிரி அதட்டிப்பேசக் கூடத் தெரியுமா? முழுப் பொட்டைப்பயலா ஆயிடலேன்னு சொல்லு” என்றான்.

“ஏய், என்ன குடிச்சிட்டு கிடிச்சிட்டு வந்திருக்கியா?” குமரகுருவுக்குக் கோபம் வந்தது.

“நான் குடிக்கிறவன் தான். ஆனா இப்ப குடிக்கலே. ஆனா நீ குடிகெடுக்கிற மடையன். குடியும் குடித்தனமுமா வாழ வேண்டிய அப்பாவிப் பொண்ணோட வாழ்க்கையை குட்டிச்சுவராக்கின வீணன். உன் அம்மா ஒரு தாடகைன்னு ஊரிலே சொல்றாங்க. அவ சரியான கூனியின்னும் தெரியுது. ரெண்டு பேரும் சேர்ந்து வளர்மதியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/133&oldid=1140094" இலிருந்து மீள்விக்கப்பட்டது