பக்கம்:இருட்டு ராஜா.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132இருட்டு ராஜா

 வாழவிடாமப் பண்ணியிருக்கீங்க. அதை விடக் கல்யாணமே பண்ணிக்காம இருந்திருக்கலாம். ஒரு பெண்ணை வயிறு எரியப் பண்ணிப் போட்டு, நீங்க சாமி கும்பிட புண்ணிய ஸ்தலம் தேடி வந்திருக்கீகளே! அந்தப் பெண்ணுக்கு நீங்க இழைச்ச கொடுமைகளும் அதுனாலே ஏற்பட்ட பாபமும் எப்படித் தீரும்? நீங்க உருப்பட மாட்டிங்க. போங்க போங்க. படிச்சிருந்தும் புத்தியில்லாத மடச்சாம்பிராணி, இன்னும் அம்மாப் பிள்ளையாகவே தான் இருக்கப் போறியா? உனக்குன்னு தனி யோசனையும் சுய தைரியமும் கிடையாதா?”

குமரகுரு தலையை தொங்கப் போட்டபடி நின்றான். இசக்கி அம்மாள் சுதாரித்துக் கொண்டாள். “வா, குமாரு நடுத்தெருவிலே மறிச்சுக்கிட்டு மரியாதை இல்லாமப் பேசுகிறவன் கூட நமக்கு என்ன பேச்சு? வா வா” என்று அவசரமா நகர்ந்தாள்.

குமரகுருவும் தொடர்ந்தான்.

“வாங்க அண்ணாச்சி. கூட்டம் கூடப் போகுது” என்று ராமதுரை முத்துமாலையிடம் மெதுவாகச் சொன்னான்.

முத்துமாலை உரத்த குரலிலேயே அறிவித்தான், “ஏ மூவி அலங்காரி, நீ ஒரு பெண்ணை தள்ளி வச்சிட்டு, உன் மகனுக்கு வேறே இடத்திலே பொண்ணு பார்த்தாலும் பார்ப்பே. எந்தச் சீமையிலேயிருந்து மருமக வந்தாலும் நீ அவளை வாழவிடப் போறதில்லே. சரியான பாதகத்தி நீ உன் கொடுக்கைப் புடிச்சுக் கிட்டுத் திரியிதானே, முதுகெலும்பில்லாத பய, அவன் இந்த நிலையிலே இருக்கிற வரைக்கும் உன் குடும்பம் விளங்காது. நீ கடலாடிவிட்டு முருகனைக் கும்பிடு. அப்புறம் கன்னியாகுமரி, ராமேசுரம்னு எங்கே வேணும்னாலும் போ. நீங்க உருப்படப் போறதில்லே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/134&oldid=1140105" இலிருந்து மீள்விக்கப்பட்டது