பக்கம்:இருட்டு ராஜா.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
140இருட்டு ராஜா
 


யிருந்தது. அதன் உச்சரிப்பில் கடா “கதா” ஆகவும், அழகுள்ள என்பது “அயகுள்ள” என்றும், மழைபெய்த என்பது “மயபெஞ்ச” என்றும், விழுந்தாராம் வந்து “வியுந்தாயாம்” என்றும் மாறிவிட்டன. அந்தப் பிள்ளை அப்படிப் பாடுவதும் தனி இனிமையாகத்தானிருந்தது.

மங்கையின் அப்பா சிலைகளைத் திருடிப் பிடிபட்டு ஓடிப்போன பிறகு முத்துமாலைக்கு அந்தக் குழந்தையின் மீது அனுதாபம் பிறந்தது. ஊர்ப்பிள்ளைகள் அதை “சாமிதிருடி மகள்” என்று பழித்துக் கேலி பண்ணுவது அவன் காதுகளிலும் விழுந்தது.

அவ்வாறு பரிகசிக்கும் பிள்ளைகளை அவன் கண்டித்தான். சில பிள்ளைகளின் காதைப் பிடித்துத் திருகியும், சில குழந்தைகளின் மண்டையில் நறுக்கென்று குட்டியும், “இனிமேல் இப்படிச் சொன்னால் முதுகுத் தோலை, உரிச்சுப் போடுவேன், ஜாக்கிரதை” என்று மிரட்டியும் எச்சரித்தான்.

திரிபுரம் ஊர்பிள்ளைகளின் தன்மைகளை அறிந்து, தன் பிள்ளைகளை அடிக்கடி வெளியே போகக் கூடாது என்று அடக்கி வைத்திருந்தாள். அப்படியும் சில சமயங்களில் மங்கை வேடிக்கை பார்க்க வெளியே வந்து விடும்.

மங்கை இப்போதெல்லாம் நகைகள் அணிவதில்லை. பகட்டான ஆடைகள் உடுத்துவதில்லை, ஒழுங்காகத் தலைவாரிக் கொள்வது கூட இல்லை என்பதை முத்துமாலை கவனித்தான். திரிபுரத்தின் உள்ளமும் உணர்ச்சியும் பாதிக்கப்பட்டிருப்பதின் அடையாளங்கள் தான் இவை எல்லாம் என்று அவன் புரிந்து கொண்டான். அவளுக்காகவும் அவன் அனுதாபப்பட்டான்.

அவளுடைய வீட்டுக்குப் போய் அவளைப் பார்த்து பேசலாமா, கடிதம் ஏதாவது வந்ததா என்று கேட்கலாமா என்று அவன் நினைத்தான். ஆனாலும் போகவில்லை.