பக்கம்:இருட்டு ராஜா.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142இருட்டு ராஜா


ஒரு தெருவின் திருப்பத்தில் ஒரு பிள்ளை நின்று அழுது கொண்டிருந்தது.

“யாரது? மங்கை மாதிரி இருக்கு” என்று அவன் மனம் அறிவித்தது.

மங்கை தான். அவன் பதறினான். ஏன் இந்த நேரத்தில் இந்தப் பிள்ளை இப்படிப் அழுதுகிட்டு நிற்குது?

அதன் அருகில் போய் “மங்கை, ஏன் அழுதே? என்ன விசயம்? நீ எப்படி இங்கே வந்தே?” என்று அன்பாக விசாரித்தான் முத்துமாலை.

மங்கை விக்கி விக்கி அழுதது. விரல்களை மடக்கிக் கொண்டு கைகளின் பின்புறத்தால் கண்களைத் தேய்த்த படி அழுது நின்றது.

அவன் அதை வாரி எடுத்தான். “இருட்டப்போற நேரத்திலே நீ ஒத்தையிலே இங்கெல்லாம் வரலாமா? நீ வந்தது உன் அம்மாவுக்குத் தெரியுமா?” என்று பிரியமாக விசாரித்தான்.

“அம்மா என்னை அடி அடின்னு அடிச்சா, தொலைஞ்சு போ சனியனேயின்னு புடிச்சுத் தள்ளினா. அம்மாவை பாக்கவே எனக்கு பயமா இருந்தது. ஒடியாந்துட்டேன்” விம்முதல் விக்கல்களுக்கிடையே சிறிது சிறிதாக விஷயத்தைக் கூறியது அந்த பிள்ளை.

ஐயோ பாவம் என்று இரங்கியது அவன் மனம். கடைக்குப் போய் இரண்டு வேர்க்கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்தான். “வீட்டுக்குப் போகலாம். இருட்டிட்டுதுன்னு சொன்னா, அப்புறம் பயமா இருக்கும். வீட்டுக்குப் போற வழி தெரியாமப் போயிடும்.” என்று கூறியவாறே திரிபுரத்தின் வீடு நோக்கி நடந்தான்.

கதவு திறந்திருந்தது. பிள்ளையை திண்ணையில் இறக்கிவிட்டு. “உள்ளே போ கண்ணு. போறையா?” என்று பேசினான் முத்துமாலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/144&oldid=1140240" இலிருந்து மீள்விக்கப்பட்டது