பக்கம்:இருட்டு ராஜா.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20

நாளுக்கு நாள் அதிகம் அதிகமாக மனச் சோர்வுபெற்று வந்த முத்துமாலை, திரிபுரத்தின் தாக்குதலினால் வெகுவாக பாதிக்கப்பட்டான். அவனுடைய மனம் உடைந்து சிதைந்து தகர்ந்துவிட்டது போன்ற உணர்வு அவனுள் படிந்தது.

திரிபுரம் இப்படி வெறியுடன் தன்னை ஏசிப் பேசுவாள், கேவலமாகப் பேசி வெளியே துரத்துவாள் என்று அவன் எவ்வாறு எண்ணியிருக்க முடியும்? நீ—வா—போ என்று ஏகவசனத்தில் அவள் பேசுவாள் என்றுகூட எண்ணியவனில்லை அவன். அப்படி இருக்கையில் “போடா” என்று அவள் தன்னை மரியாதைக் குறைவாகப் பேசியதைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போனான். அவள் சுய உணர்வுடன் பேசவில்லை; மன நோய்க் கோளாறுதான் அவளை இவ்வாறெல்லாம் ஆட்டி வைக்கிறது என்ற நினைப்பு அவனுக்கு சிறு ஆறுதல் அளித்த போதிலும், அவனது மனம் உதைத்துக் கொண்டு தாணிருந்தது.

அவளுடைய குடும்ப வாழ்க்கை சிதைவுற்றதற்கு திரிபுரம் தன்னைக் குற்றம் சாட்டியதை முத்துமாலையினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் வாழ்வு சீர் குலைந்ததுக்கு அவனா காரணம்? அவளுடைய புருஷனின் குணக்கேடுகளும் அயோக்கியத்தனங்களும் அதர்மச் செயல்களும் அல்லவா அடிப்படைக் காரணம்? இதை ஏன் அவள் மறந்தாள்?

இதை எண்ண எண்ண அவன் மனம் குழம்பியது. திரிபுரமா இப்படி மாறிப் போனாள் நம்ம திரிபுரமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/147&oldid=1140263" இலிருந்து மீள்விக்கப்பட்டது