பக்கம்:இருட்டு ராஜா.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148இருட்டு ராஜா

 தான் எப்பவும். வெட்டிக்கிட்டு சாவிகளோ நாசமாப் போவிகளோ... எக்கேடும் கெட்டுப் போங்க” என்று சொல்லியபடியே அவன் நடந்துபோனான்.

போகிற போதே தானாகவே பேசிக் கொண்டான்; “இதெல்லாம் என்னமனுச சென்மங்க! வீட்டையும் தெருவையும் நாறடிச்சுக்கிட்டு! செத்துத் தொலையட்டுமே சனியங்க.

முத்துமாலையின் உள்ளத்தில் கசப்பு மண்டிச் சுழன்றது ஒருவெறுமை அவனுள் புகுந்தது. குழந்தைகள் கூட அவன் கவனத்தைக் கவரும் சக்தியை இழந்துவிட்டன. எதிலுமே அவனுக்குப் பிடிப்பு குறைந்து போயிற்று.

குழந்தை ஒன்று கீழே விழுந்துவிட்டால் அதுக்கு அடி கிடி பட்டதோ என அங்கலாய்த்துப் பதறக் கூடியவன் தான் அவன்.

இப்போதோ?

ஒரு சிறுமி வீட்டுப் படிக்கட்டில் உருண்டு விழுந்தது. அதன் நெற்றியில் காயம் பட்டு அது கதறி அழுதது.

பகல் நேரம் தான். பார்த்துக் கொண்டு போன முத்துமாலை இரக்கத்தோடு முன்னே பாயவில்லை. குழந்தையை எடுத்து அன்போடு உதவி புரியவில்லை.

“தொலையட்டும். ஆடிக் கொண்ணு அமாவாசைக்கு ஒண்ணுன்னு தான் பிள்ளைகளை வதவதன்னு பெத்துத் தள்ளுதாங்களே. ஒண்னு குறைஞ்சா என்ன கெட்டுப் போச்சு!” என்று முணு முணுத்தபடி நடந்தான்.

இவ்வாறு அநேக நிகழ்ச்சிகள்.

“ஆளே அடியோடு மாறிப் போனான்” என்பதை அவனுடைய கூட்டாளிகள் உணர்ந்தார்கள். தனபாக்கியமும் புரிந்து கொண்டாள். ஏன் இப்படி திடீர்னு மாறினான் என்பதுதான் ஒருவருக்கும் விளங்கவில்லை.

தனபாக்கியம் அவனிடம் கேட்டாள்; “உங்களுக்கு என்ன செய்யுது? ஏன் ஒரு மாதிரி இருக்கீக?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/150&oldid=1140274" இலிருந்து மீள்விக்கப்பட்டது